இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் உபேந்திர திவேதி 2026 ஜனவரி 06 ஆம் திகதி இலங்கை இராணுவத் தலைமையகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த இந்திய இராணுவ பிரதானி, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவால் மரியாதையுடன் வரவேற்கப்பட்டார். பின்னர் வருகை தந்த இந்திய இராணுவ பிரதானிக்கு இலங்கை இராணுவ படையினரால் சம்பிரதாயங்களுக்கமைய அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர், சிரேஷ்ட அதிகாரி, இராணுவத் தளபதியை சந்தித்தார். பல்லூடக மண்டபத்தில் இந்திய மானியத்தின் கீழ் இராணுவப் போர் கல்லூரியில் இந்திய-இலங்கை விளையாட்டு வளாகத்திற்கான பரிமாற்றக் கடிதங்களில் கையெழுத்திடும் நிகழ்வுடன் சந்திப்பு நிறைவடைந்தது.
பின்னர், அனர்த்த நிவாரண குழுக்களின் உறுப்பினர்களின் குறிப்பிடத்தக்க மற்றும் அர்ப்பணிப்புள்ள சேவையை அங்கீகரிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவில் இந்திய இராணுவ பிரதானி கலந்து கொண்டார். பின்னர் இரு இராணுவத் தளபதிகளுக்கும் இடையிலான வலுவான பரஸ்பர பிணைப்பை பிரதிபலிக்கும் வகையில், 20 மஹிந்திரா ஸ்கோர்பியோ வாகனங்கள், பயிற்சி சிமுலேட்டர்கள் மற்றும் 2 அம்பியூலன்ஸ்களை உத்தியோகப்பூர்வமாக ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில், இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே.தொலகே, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத், இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.
இந்த விஜயத்திற்கு முன்னதக ஜெனரல் திவேதி பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரிக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு பயிற்சி பெறும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி நூலகத்தில் இந்திய-இலங்கை மூலையையும் அவர் திறந்து வைத்ததுடன் அம்பியூலன்ஸ்சையும் வழங்கினார். மேலும் பத்தரமுல்லையில் உள்ள இந்திய அமைதி காக்கும் படையின் நினைவுத்தூபியில் இந்திய வீரர்களின் நினைவு மற்றும் தியாகங்களை கௌரவிக்கும் வகையில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.






