பராசக்தி படத்தை தடை செய்யக்கோரி தமிழ் நாட்டில் இளைஞர் காங்கிரஸ் போர்க்கொடி .

 


நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், 1960-களின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம், காங்கிரஸ் கட்சியைத் தவறாகச் சித்தரிப்பதாகக் கூறி அப்படத்தைத் தடை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், படத்தில் இடம்பெற்றுள்ள பின்வரும் காட்சிகள் வரலாற்றுக்கு முரணானவை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1965 இல் காங்கிரஸ் அரசு தபால் நிலையங்களில் இந்தியில் மட்டுமே படிவங்களை நிரப்ப வேண்டும் என அறிவித்ததாகக் கூறப்படும் காட்சி ஒரு கட்டுக்கதை என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மறைந்த பிரதமர் இந்திரா காந்தியை வில்லத்தனமாகச் சித்தரிக்கும் வசனங்கள் மற்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், இது சட்டப்படி தவறு என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1965 பெப்ரவரி 12 அன்று இந்திரா காந்தி கோவைக்கு வராத நிலையில், அவர் அங்கு வந்தது போன்றும், அவர் கண்முன்னே ரயில் எரியும் காட்சியும் கற்பனையாகச் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

படத்தின் இறுதியில் காமராஜர், இந்திரா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் புகைப்படங்களைக் காட்டி, பொள்ளாச்சியில் 200 தமிழர்களை காங்கிரஸ் சுட்டுக்கொன்றதாக ஆதாரமற்ற பொய்களைத் தயாரிப்புத் தரப்பு பரப்பியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கொடியை எரிக்கும் காட்சிகள் திட்டமிட்டுப் படத்தில் திணிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வரலாற்று உண்மைகளைத் திரித்து காங்கிரஸ் கட்சியைத் தாக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என்றும், படக்குழுவினர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தவறும் பட்சத்தில், படக்குழுவினர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காங்கிரஸ் தொண்டர்கள் இதற்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.