சிறுவர்களிடையே விட்டமின் டி குறைபாடு அதிகரிப்பு .

 


சிறுவர்கள் அதிக நேரம் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதால், அவர்களுக்கு அவசியமான விட்டமின் டி சத்து குறைவடைந்து வருவதாக சுகாதார நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
 
கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் டெப்கள் போன்றவற்றின் அதீத பயன்பாடு காரணமாக சிறுவர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
 
இதனால், விட்டமின் டி சத்தைப் பெற்றுக்கொள்ளக்கூடிய அதிகாலை நேரத்துச் சூரிய ஒளி அவர்களுக்குக் கிடைப்பதில்லை.
விட்டமின் டி இயற்கையாக உற்பத்தி செய்யப்படுவதற்கு காலை நேரச் சூரிய ஒளி இன்றியமையாதது.
 
இது சிறுவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.
 
இந்தச் சத்து குறையும் போது, அவர்கள் இலகுவாக நோய்த்தொற்றுகளுக்கு ஆளாக நேரிடும் என சிறுவர் நல விசேட மருத்துவ நிபுணர் மருத்துவர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார்.
 
சூரிய ஒளி கிடைப்பதுடன் மாத்திரமன்றி, வெளிப்புற விளையாட்டுக்களில் ஈடுபடுவது சிறுவர்களின் உடல் மற்றும் மன வளர்ச்சிக்கும் மிக அவசியமானது.
 
பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் 'ஸ்கிரீன் டைம்' எனப்படும் டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்தும் நேரத்தைக் குறைக்க வேண்டும்.
 
அதிகாலை வேளையில் பிள்ளைகளை வெளிப்புறச் செயற்பாடுகளில் ஈடுபட ஊக்குவிப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை உறுதிப்படுத்த முடியும் என மருத்துவர் தீபால் பெரேரா வலியுறுத்தியுள்ளார்.