தேசிய ரீதியாக சுகாதார அமைச்சு முன்னெடுத்துள்ள முன்னோடி திட்டமான ஆரோக்கிய நிலையம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென்மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட அரசடித்தீவு பகுதியிலும், போரதீவுப்பற்று பிரதேசத்திற்குட்பட்ட மண்டூர் பகுதியிலும் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதன் முதல் நிகழ்வானது அரசடித்தீவில் மகிழடித்தீவு வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் டுலக்ஸி தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் கே.மோகனகுமார், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றாநோய் பிரிவின் பொறுப்பதிகாரி வைத்தியர் எம்.ருதேசன், மகிழடித்தீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ரமேஸ், கொக்கட்டிச்சோலை பிரதேச சபையின் தவிசாளர் இ.திரேசகுமாரன், கிராம உத்தியோகத்தர்கள் பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள், குடும்பநல மருத்துவ மாதுக்கள் அதிதிகளாக கலந்துகொண்டனர்.
நாடளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கும் இத் தேசிய திட்டத்தின் கீழ் ஆரோக்கியா நிலையத்தின் முதன்மை நோக்கம் இப்பிரதேசத்தில் வாழும் சிறு பிள்ளைகள் முதல் முதியவர் வரைக்கும் அவர்கள் இல்லங்களிற்கு அருகாமையில் தொடர்ச்சியான அடிப்படை சுகாதார சேவைகளை வழங்குவதாகும்.
இப்பிரதேசத்தில் உள்ள மக்களுக்கான தொற்றா நோய் தொடர்பான பரிசோதனைகள், மாற்று திறனாளிகளுக்கான பராமரிப்பு, கண் பராமரிப்பு, புற்றுநோய் பரிசோதனை, முதியோர் பராமரிப்பு, இளைஞர் நலன் மற்றும் பல அடிப்படை சுகாதார சேவைகள் வழங்கப்படவுள்ளன.
இவ் மையத்தின் கீழ் அரசடித்தீவு, அரசடித்தீவு வடக்கு, மற்றும் பட்டிப்பளை ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை சேர்ந்த சுமார் 3000 மேற்பட்ட மக்களுக்கான சேவைகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.







