
எஸ். சினீஸ் கான்.
பாலைவனத்தின் மத்தியில், அரேபிய வரலாற்றின்
சுவாசமாகத் திகழும் ஒரு நகரம், இன்று உலக சுற்றுலா வரைபடத்தில் புதிய
சாதனைகளைப் படைத்துவரும் ஓர் நகரமாக சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்
விளங்குகிறது. ஒருகாலத்தில் நிர்வாக மையமாக மட்டுமே அறியப்பட்ட நகரமான இந்
நகரம் தற்போது மரபையும் நவீனத்தையும் ஒரே பாதையில் இணைத்துக் கொண்டு, உலகப்
பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் சுற்றுலா நகரமாக திகழ்கிறது.
ரியாத்
நகரின் அடையாளமானது அதன் ஆழமான வரலாற்றுப் பின்னணியில் துவங்குகிறது.
திரிய்யா போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதிகள், சவூதி அரச வம்சத்தின்
தோற்றத்தையும், அரேபிய, இஸ்லாமிய மரபின் வேர்களையும் உயிர்ப்புடன்
எடுத்துரைக்கின்றன. மண் சுவர்களால் ஆன பழமையான கட்டிடங்கள், காலத்தின்
ஓட்டத்தையும் தேச உருவாக்கத்தின் பயணத்தையும் இன்றும்
நினைவூட்டிக்கொண்டிருக்கான்றன. இத்தகைய இடங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு
சாதாரண காட்சிப் பொருளாக அல்லாமல் வரலாற்றை நேரடியாக அனுபவிக்கும்
சிறப்புமிக்க பயணமாக அமைகின்றன.
இந்த வரலாற்றுப் பயணத்தின் நவீன
வெளிப்பாடாக புஜைரி டெரஸ் (Bujairi Terrace) திகழ்கிறது. பாரம்பரிய நஜ்தி
கட்டிடக்கலை பாணியில் வடிவமைக்கப்பட்ட இந்த இடம், நவீன உலகின் அனைத்து
வசதிகளையும் தன்னுள் இணைத்துக் கொண்டு, ரியாத் சுற்றுலாவின் புதிய
அடையாளமாக விளங்குகிறது. திரிய்யாவின் வரலாற்றுச் சிறப்பை அறிந்து கொள்ளும்
வாய்ப்புடன், உலகத் தர உணவுகளை ருசிக்கும் அனுபவத்தையும் இது வழங்குகிறது.
மாலை நேரங்களில் ஒளிவிளக்குகளால் அலங்கரிக்கப்படும் இந்த பகுதி, கலாச்சார
நிகழ்ச்சிகள் மற்றும் கலை வெளிப்பாடுகளுடன், சர்வதேச தர சுற்றுலா மையமாக
மிளிர்ந்து வருகிறது.
ரியாத் நகரின் சுற்றுலா வளர்ச்சி வெறும்
கட்டிடங்களோ அல்லது பொழுதுபோக்கு மையங்களோடு மட்டுமல்லாமல், பாதுகாப்பான
சூழல், குடும்பங்களுக்கு ஏற்ற அமைப்புகள், இஸ்லாமிய மதிப்புகளை
அடிப்படையாகக் கொண்ட சமூக ஒழுங்கு, ஹலால் சுற்றுலா வசதிகள் ஆகியவற்றின்
ஒருங்கிணைப்பாக அமைகிறது. நவீனத்திற்குள் மரபையும் மதிப்புகளையும்
இழக்காமல் முன்னேறும் நகரமாக ரியாத் உலகளவில் தனித்துவம் பெற்றுள்ளது
எனலாம்.
அதேபோன்று, ரியாத்தின் முக்கிய வரலாற்றுச் சின்னங்களில்
ஒன்றாக மஸ்மக் கோட்டை (Masmak Fort) விளங்குகிறது. சவூதி அரேபியாவின்
ஒன்றுபட்ட தேச உருவாக்கப் பயணத்தை நினைவூட்டும் இந்த கோட்டை, இன்று ஒரு
அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்
பயணிகளை ஈர்க்கும் முக்கிய இடமாக உள்ளது. இது ரியாத்தின் அரசியல் மற்றும்
வரலாற்று அடையாளத்தை உலகிற்கு எடுத்துச் சொல்லும் முக்கியச் சின்னமாகக்
கருதப்படுகிறது.
அதேபோல், சவூதி அரேபிய தேசிய அருங்காட்சியகம்
(National Museum of Saudi Arabia) கல்வி மற்றும் கலாச்சார சுற்றுலாவின்
மையமாக விளங்குகிறது. சவூதி வரலாறு, இஸ்லாமிய பாரம்பரியம், புவியியல்
மற்றும் கலாச்சாரம் ஆகியவை நவீன காட்சிப்படுத்தல்களுடன் இங்கு
விளக்கப்படுகின்றன. மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள்
அனைவருக்கும் இது ஒரு அறிவுச் சுற்றுலா தளமாக திகழ்கிறது.
இயற்கையை
விரும்பும் பயணிகளுக்காக வாடி ஹனீஃபா (Wadi Hanifa) ஒரு முக்கிய ஓய்வு
மற்றும் சுற்றுலா தலமாக உருவெடுத்துள்ளது. நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள
இந்த பசுமையான இவ்விடம், நடைபயிற்சி, ஓய்வு மற்றும் இயற்கை ரசனைக்கு ஏற்ற
இடமாக மாற்றப்பட்டுள்ளது. பாலைவன நகரமான ரியாத்தில், இயற்கையும் நகர
வாழ்வும் இணையும் அழகிய எடுத்துக்காட்டாக இது விளங்குகிறது.
நவீன
ரியாத்தின் அடையாளங்களாக கிங்டம் டவர் (Kingdom Tower) மற்றும்
அல்-ஃபைசலிய்யா டவர் (Al Faisaliah Tower) திகழ்கின்றன. உயரமான பார்வை
மேடைகள், வணிக வளாகங்கள், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு மையங்களுடன்,
இக்கட்டிடங்கள் ரியாத்தின் நவீன நகர உருவத்தை பிரதிபலிக்கின்றன. குறிப்பாக
இரவு நேரங்களில், ஒளிவிளக்குகளுடன் மின்னும் இவை சுற்றுலாப் பயணிகளை அதிகம்
ஈர்க்கின்றன.
பொழுதுபோக்கு மற்றும் குடும்ப சுற்றுலாவிற்காக ரியாத்
சீசன் (Riyadh Season) நிகழ்வுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உலகின் பல
நாடுகளிலிருந்து வரும் கலாச்சார நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள்,
விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை விழாக்கள், ரியாத்தை ஒரு சர்வதேச
பொழுதுபோக்கு நகரமாக மாற்றியுள்ளன. இதன் மூலம் வருடம் முழுவதும் சுற்றுலா
இயக்கம் தொடர்ச்சியாக நடைபெறுகிறது.
இதனுடன், நவீன பொழுதுபோக்கு
நகரங்கள், பூங்காக்கள் மற்றும் குடும்பங்களுக்கு ஏற்ற ஓய்விடங்கள்,
பாதுகாப்பும் இணைந்த சுற்றுலா சூழலை உருவாக்குகின்றன. குழந்தைகள் முதல்
முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த
சுற்றுலாத்தளங்கள், ரியாத்தை குடும்ப சுற்றுலாவிற்கான சிறந்த மற்றும்
தரமானை நகரமாக உயர்த்துகின்றன.
இந்த அனைத்தையும் ஒருங்கிணைத்துப்
பார்க்கும்போது, ரியாத் வரலாற்று சிறப்புமிக்க இடமாக மட்டுமல்லாமல்
இயற்கை, நவீனம், கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய அனைத்தும்
சங்கமிக்கும் உலகின் முதற்தர சுற்றுலா நகரமாக உருவெடுத்துள்ளது எனலாம்.
இந்த
மாற்றம் தற்செயலானது அல்ல. மரபை காக்கவும், அதே நேரத்தில் நாட்டை
உலகத்துடன் போட்டியிடும் வகையில் முன்னேற்றவும் வழிகாட்டிய வலுவான
தலைமையின் திறமையினால் இந்த வளர்ச்சி நிகழ்ந்துள்ளது. இரு புனித
மஸ்ஜித்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் ஆல் சவூத்
அவர்களின் ஞானமும் அனுபவமும், சவூதி அரேபியாவின் வரலாறும் கலாச்சாரமும்
பாதுகாக்கப்பட வேண்டுமென்ற உறுதியான அடித்தளத்தை அமைத்துள்ளது. அதேபோல்,
இளவரசரும் பிரதமரும் ஆன முகம்மத் பின் சல்மான் அவர்களின் தொலைநோக்கும்
துணிச்சலான சீர்திருத்தங்களும், ரியாத்தை உலகம் வியக்கும் சுற்றுலா மற்றும்
கலாச்சாரத் தலைநகரமாக மாற்றி வருகின்றன என்பது உறுதியாகிறது.








