கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனைப் பிரதேச மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாறக் தலைமையில் பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலகங்களுக்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைத்தார்.
மேலும் சமுர்த்தி சமூக வலுவூட்டல் திட்டத்தின் பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகளாக சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் கடந்த ஆண்டு தித்வா புயல் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 40 மாணவர்களுக்கான உதவித் தொகைகள், சமுர்த்தி பயனாளி குடும்பங்களில் உயர் தரத்தில் கல்வி கற்கும் 50 மாணவர்களுக்கான சிப்தொர புலமைப் பரிசிலில் நிதி மற்றும் பதிவு செய்யப்பட்ட கலை மன்றங்களுக்கு தேவையான உபகரணங்கள் அதிதிகளால் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் ஏ.ஜுமானா ஹஸீன், கணக்காளர் எம்.ஐ.எஸ். சஜ்ஜாத், நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஏ.எம். தாஹிர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.எல்.ஏ.மஜீத், கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.சமீம், கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை உறுப்பினர் மௌலவி எஸ்.எம்.ஏ.லத்தீப், பிரஜா சக்தி தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினருமான எம்.ஏ.சி.நியாஸ்தீன் ஹாஜியார், மற்றும் பிரஜா சக்தி தலைவர்கள், நிறைவேற்றுக் குழு செயற்பாட்டாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





