இலங்கையில் இன்று முதல் பல்வேறு முக்கியமான மாற்றங்கள் மற்றும் புதிய
திட்டங்கள் நடைமுறைக்கு வரவுள்ளன. இதன்படி, தொழிலாளர்களின் குறைந்தபட்ச
வேதனத்தில் இன்று முதல் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படுத்தப்படுகிறது.
இலங்கையின் தேசிய குறைந்தபட்ச மாத வேதனம் 30 ஆயிரம் ரூபாயாக
அதிகரிக்கப்படுகிறது. குறைந்தபட்ச நாளாந்த வேதனம் ஆயிரத்து 200 ரூபாயாக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த வேதனம், வருகை கொடுப்பனவுடன்
சேர்த்து அதிகரிக்கப்பட்ட ஆயிரத்து 750 ரூபாய் இன்று முதல் நடைமுறைக்கு
வருகிறது.
அதேபோன்று, கல்வித்துறையில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட புதிய மாற்றங்கள் இன்று முதல் படிப்படியாக ஆரம்பமாகின்றன.
அதன்படி, 2026ஆம் கல்வி ஆண்டு முதல், தரம் ஒன்று மற்றும் தரம் 6 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
மாணவர்களின் திறன்களைக் கண்டறியும் புதிய மதிப்பீட்டு முறைகள் மற்றும் பரீட்சை முறையில் மாற்றங்கள் இந்த ஆண்டு முதல் அமுலாகின்றன.
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டத்தின் கீழ், நிதிச் சேவைகளை
வழங்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட புதிய வரி விலக்கு இன்று முதல்
நடைமுறைக்கு வருகிறது.
இலங்கை மத்திய வங்கியின் பொதுக் கடன் திணைக்களம் இன்று முதல்
மூடப்பட்டு, அதன் செயற்பாடுகள், கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவுகள்
திணைக்களத்திற்கு மாற்றப்படுகின்றன.
அரசாங்கத்தின் 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு
முன்மொழிவுகளின்படி, ஆசிரியர்கள் உட்பட அரச பணியாளர்களின் அடிப்படை வேதன
அதிகரிப்பானது மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
முதலாம் கட்டம் 2025 ஏப்ரல் மாதம் முதல் வேதன அதிகரிப்பின் ஒரு பகுதி
வழங்கப்பட்டது. எஞ்சியுள்ள அதிகரிப்பில் ஒரு பகுதி இன்று முதல்
ஆசிரியர்களின் அடிப்படை வேதனத்தில் சேர்க்கப்படவுள்ளது.





