வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 95 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக சிவப்பு அறிவித்தல் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
2024 ஆம் ஆண்டில் சிவப்பு எச்சரிக்கை மூலம் 10 சந்தேக நபர்களும், 2025 ஆம் ஆண்டில் 11 சந்தேக நபர்களும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு கடத்தல் சட்டத்தின் கீழ் 21 சந்தேக நபர்களை இலங்கைக்கு கொண்டு வர முடிந்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து குற்றச் செயல்களை முன்னெடுத்து வரும் குற்றவாளிகள் பலரை நாம் அடையாளம் கண்டுள்ளோம்.
அதன் ஒரு கட்டமாகவே இன்று ஐக்கிய அரபு இராச்சியம், அபுதாபி சர்வதேச பொலிஸ், டுபாய் பொலிஸ் மற்றும் தூதரகங்களின் உதவியுடன் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
கைதானவர்கள் பல கொலைச் சம்பங்களுடன் மற்றும் நிதி மோசடியுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.





