இஷாரா செவ்வந்தியை மேலும் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைக்க உத்தரவு .

 


 திட்டமிட்ட குற்றக்கும்பல் உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்படுவதற்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி என்ற சந்தேகநபரை மேலும் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம் முன்னிலையில் அண்மையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, சந்தேகநபரான இஷாரா செவ்வந்திக்கு எதிராக ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 90 நாட்களுக்கான தடுப்புக்காவல் உத்தரவு ஜனவரி 15ஆம் திகதியுடன் நிறைவடைந்ததாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் சுட்டிக்காட்டினர்.
இதனையடுத்து, மேலதிக விசாரணைகளுக்காக அவரை மேலும் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைக்க நீதவான் அனுமதி அளித்தார்.

அத்துடன், இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு சந்தேகநபர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகக் காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அவர்களைக் கைது செய்வதற்காகச் சர்வதேச காவல்துறைக்கு 'சிவப்பு அறிவித்தல்' பிறப்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டது.
குறிப்பாக, சம்பத் அஷேன், ஷான் அரோஷ் (மத்துகம ஷான்), படுவத்தே சாமர மற்றும் டுபாய் சுத்தா ஆகிய சந்தேகநபர்களுக்கு எதிராக ஆங்கில மொழியில் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்படவுள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நான்கு சந்தேகநபர்கள் நேரடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

ஏனைய சந்தேகநபர்கள் 'ஸூம்' (Zoom) தொழில்நுட்பம் ஊடாக முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களை எதிர்வரும் பெப்ரவரி 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.