6 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் குழுவொன்று, முன்மொழியப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு கோரி போராட்டம் முன்னெடுப்பு .

 


2026 ஆம் ஆண்டில் 6 ஆம் தரத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் குழுவொன்று, 6 ஆம் தரத்திற்கு முன்மொழியப்பட்டுள்ள கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு கோரி கல்வி அமைச்சுக்கு முன்னால் இன்று ஒரு போராட்டத்தை முன்னெடுத்தனர். 

இந்தப் போராட்டத்தில் பெற்றோருடன் இணைந்து சிறு பிள்ளைகளும் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

சர்ச்சைக்குரிய ஆங்கிலப் பாடத் தொகுதியைத் தவிர, ஏனைய பாடத் தொகுதிகளையும் பிள்ளைகளுக்குக் கற்பிக்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தினர். 

“ஆசிரியர்கள் கற்பிக்கத் தயாராக இருக்கும்போது, சர்ச்சைக்குரிய ஆங்கிலப் பாடத் தொகுதியைத் தவிர மற்ற அனைத்துப் பாடத் தொகுதிகளிலும் எந்தப் பிரச்சினையும் இல்லாதபோது, பிள்ளைகளும் கற்க ஆர்வமாக இருக்கும்போது, பெற்றோர்களும் இந்த மாற்றத்திற்குத் தயாராக இருக்கும்போது – பிள்ளைகளுக்கு விநியோகிக்கப்பட்ட புத்தகங்களை அரசாங்கம் ஏன் மீண்டும் கையகப்படுத்துகிறது என்று நாங்கள் கேட்க விரும்புகிறோம்,” என போராட்டக்காரர் ஒருவர் தெரிவித்தார்.

“பிள்ளைகளின் வாழ்க்கையுடன் விளையாடாதீர்கள். அரசியலை அரசியல் களத்திலேயே வைத்துக்கொள்ளுங்கள். ஆசிரியர்களும் அதிபர்களும் இந்தச் சீர்திருத்தத்தை ஒரு நல்ல மாற்றம் என்று அங்கீகரித்துள்ளனர்.

தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்காக எமது பிள்ளைகளின் வாழ்க்கையுடன் விளையாட முடியாது. இந்தப் புதிய பாடத் தொகுதி முறையை எமது பிள்ளைகளுக்கு விரைவில் அறிமுகப்படுத்துமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். 

அவ்வாறு செய்யத் தவறுவது எமது பிள்ளைகளுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்,” என மற்றொருவர் தெரிவித்தார்.