அண்மையில் இலங்கையைத் தாக்கிய 'டிட்வா' சூறாவளியினால் மத்திய மலைநாட்டிலுள்ள இயற்கை வனப்பகுதிகளில் 34 சதவீதமானவை சேதம் .

 

 








 

அண்மையில் இலங்கையைத் தாக்கிய 'டிட்வா' (Ditwah) சூறாவளியினால் நாட்டின் மத்திய மலைநாட்டிலுள்ள இயற்கை வனப்பகுதிகளில் 34 சதவீதமானவை சேதமடைந்துள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக படபெந்தி  நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.


சூறாவளியினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புகளை மதிப்பீடு செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஒன்பது பேர் கொண்ட நிபுணர் குழுவின் முதற்கட்ட அறிக்கையிலேயே இந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

அத்தனகலு ஓயா, களனி கங்கை மற்றும் களு கங்கை ஆகிய ஆற்றுப் படுகைகளின் சுற்றுச்சூழல் அமைப்புகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு, மல்வத்து ஓயா, மகாவலி கங்கை, மீ ஓயா மற்றும் கலா ஓயா போன்ற முக்கிய ஆற்றுப் பள்ளத்தாக்குகளும் இந்த அனர்த்தத்தினால் சேதமடைந்துள்ளன.

மேலும், மினிப்பே, கொத்மலை, அரநாயக்க மற்றும் பதுளை, மாத்தளை மாவட்டங்களில் உள்ள மலைநாட்டு இயற்கை காடுகளுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

 நாட்டின் கரையோரப் பகுதிகளில் பருத்தித்துறை, வலிகாமம் வடக்கு, கல்முனை, நிந்தவூர் மற்றும் கிண்ணியா ஆகிய இடங்கள் சேதமடைந்துள்ளன. அத்துடன், முத்துப்பந்தியா மற்றும் ஆராச்சிக்கட்டு பகுதிகளில் உள்ள கண்டல் காடுகள் மற்றும் அதனை அண்டிய ஏரிச் சூழல் தொகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாதிப்புகள் குறித்து இரண்டு வாரங்களில் முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், முழுமையான மற்றும் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்க குறித்த குழுவிற்கு ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தம்மிக படபெந்தி சபையில் தெரிவித்தார்.