வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்கா 30 ஆண்டுகால ஒளிநிறைந்த பயணம் தொடர்பாக ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடொன்று இன்று (20) மட்டக்களப்பு வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் பயனியர் வீதியில் உள்ள தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றது.
குறித்த செயலமர்வில் வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளார் கலந்து கொண்டு வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் 30 ஆண்டு கால ஒளி நிறைந்த பயணத்தின் தாம் பயணித்த கடினப்பாதைகள், அதனூடான சவால்கள் தொடர்பாகவும் கருத்துப்பகிர்வினை வழங்கினார்.
அவர் இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்கா 30 ஆண்டுகால ஒளிநிறைந்த பயணம் 1996 - 2026 மட்டக்களப்பு மண்ணில் 09.11.1996ஆம் ஆண்டு விதைக்கப்பட்ட ஒரு உன்னதமான கனவு, இன்று முப்பது ஆண்டுகளைக் கடந்து பல்லாயிரக்கணக்கான சிறுவர்களின் வாழ்வில் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் விதைத்துக் கொண்டிருக்கிறது.
இது வெறும் ஒரு பூங்கா மட்டுமல்ல போரினால், ஆழிப்பேரலையினால், இயற்கை அனர்த்தங்களினால் மற்றும் சமூக நெருக்கடிகளால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் மனக் காயங்களை ஆற்றும் ஒரு "உள மருத்துவமனை மற்றும் கலைகளின் ஊடாக சிறுவர்களைக் கொண்டாடும் "மனக் கலைக் கூடம்”. சிறுவர்களை மாத்திரமன்றி பெற்றார்கள் மற்றும் வளர்ந்தவர்களின் மன அழுத்தங்களை குறைத்து, அவர்களது வாழ்வை அமைதியான சூழலில் செம்மைப்படுத்தும் ஒரு "மன வள நிலையம்" ஆகவும் செயற்படுகின்றது.
1996 ஆண்டில் இலங்கையின் பல பாகங்களும் போரின் கோரப்பிடியில் சிக்கியிருந்த காலத்தில், குழந்தைகளின் மன இறுக்கத்தைப் போக்குதற்கும், அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குதற்கும், வளர்ந்தவர்களின் மனக் காயங்களை தீர்ப்பதற்குமான ஒரு சிந்தனை பிறந்தது. அந்த முனைப்பான சிந்தனை எனது முயற்சியுடன், கனடாவில் வாழும் உளவியல் சிந்தனையாளர் போல் ஹோகன் அவர்களின் ஆலாசனை மற்றும் அனுசரணையோடும் உன்னதமான கூட்டணியில் தொடங்கப்பெற்றது. இந்த வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்கா, மட்டக்களப்பு பயனியர் வீதியில் அமைந்துள்ள தலைமையகத்தில் இப்பயணம் இன்றுவரை வெற்றியுடன் தொடர்கின்றது.
மன்ரேசா வெளிக்கள வண்ணத்துப் பூச்சிகள் பூங்காவும், திராய்மடு கொக்கு வீடும் இதன் பிரயோகச் செயற்பாட்டு மையங்களாகும். சிறுவர்களை மையமாகக் கொண்ட இந்த அமைப்பின் செயல்பாடுகள், அவர்களின் முழுமையான ஆளுமை வளர்ச்சியை பிரதான இலக்காகக் கொண்டதாகும்.
குறிப்பாக உள வளர்ச்சி (Mental Growth) போர், இயற்கை அனர்த்தம் மற்றும் சமூக அழுத்தங்களால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மனதை மீட்டெடுத்தல், பிள்ளைகளின் மனவெழுச்சி, உணர்ச்சி வெளிப்பாடு என்பவற்றை சித்திரம், இசை மற்றும் நாடகங்களின் ஊடாகக் ஆற்றுப்படுத்தி உள நலமடைய களம் அமைத்துக் கொடுத்தல், உடல் இயக்கத் திறன்களான விளையாட்டுக்கள், ஆக்க வேலைகள் மற்றும் கதை கூறல் மூலம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தல் இவ்வாறான முதன்மை நோக்கங்கங்களுடன் இந்த சமாதானப் பூங்கா இன்றுவரை சீராகப் பயணிக்கின்றது. குறிப்பாக மட்டக்களப்பில் தொடங்கிய இந்தச் ”சமாதானப் பயணம்”, இன்று இலங்கையின் தேசிய அளவில் பல பகுதிகளுக்கும் வியாபித்து, இன, மத, மொழிப் பாகுபாடுகளைக் கடந்து, அனைவரையும் ஒரு தாயின் பிள்ளைகளாக கைகோர்த்து வழிநடத்துகின்றது.
இதன் செயற்பாடுகளாக, வரைதல், பாடுதல், நடித்தல், வெளிப்படுத்துதுல் மூலம் உள ஆற்றுப்படுத்தல், மாயச் சித்திரம் வரைதல், முக வர்ணம் தீட்டல், கட்டமைக்கப்பட்ட உள ஆற்றுப்படுத்தல் நிகழ்ச்சிகள், தியானம். ஊள வழிகாட்டல், குணப்படுத்தல், கலந்துரையாடல், ஒன்றுகூடல். உணவுப்பரிமாற்றம், உள நிலைப்படுத்தலுக்கான சுற்றாடலை உருவாக்கல், உடல் ஞானம், மருத்துவ வட்டம், உணர்ச்சிகளைக் கையாளுதல் பயிற்சி என்பன முக்கியத்துவம் பெறுகின்றது.
இதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளாரின் சீரிய வழிநடாத்தலில் இத்தகைய செயற்பாடுகளுக்கு ஒத்துழைத்து இயங்கும் பணிப்பாளர் சபை, அர்ப்பணிப்பான பணியாளர்கள் மற்றும் தன்னார்வமிக்க தொண்டர்களின் துணையுடன், வண்ணத்துப் பூச்சிகள் சமாதானப் பூங்கா தனது 30வது நிறைவு ஆண்டை இவ்வருடம் மிகுந்த நம்பிக்கையுடன் எட்டியுள்ளது.
இந்த ஆண்டு அதன் 30வது ஆண்டு நிறைவை பல்தரப்பட்ட நிகழ்வுகளுடன் அனுசரிக்கத் திட்டமிட்டுள்ளதுடன், இந்த வெற்றிப் பயணத்தில் அனைவரையும் இணைந்துகொள்ளுமாறு அன்புடன் அழைப்பு விடுப்பதுடன், ”பிள்ளைகளின் ஆனந்தத்தில் மகிழ்வோம்... சமாதானத்தை விதைப்போம்..." அடுத்த தலைமுறைக்கான அமைதியான வாழ்வைக் கட்டியெழுப்ப வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்கா தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் எனும் நம்பிக்கையோடு, அவர்களோடு இணைந்து இயங்க தயக்கமின்றி தொடர்புகொள்ளுமாறு அன்புடன் அழைப்புவிடுத்திருந்தனர்.
(Butterfly Peace Gyarden Hot Line - 0775599422), email - butterflypeacegardenbatticaloa@gmail.com
குறித்த ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலில் வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் 30 ஆண்டு நிறைவு விழாவின் திட்ட நிபுணர் சட்டத்தரணி அன்பழகன் குருஸ் மற்றும் நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் நகுலேஸ் துரைசாமி உள்ளிட்ட வண்ணத்துப்பூச்சி சமாதானப் பூங்காவின் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டிருந்ததுடன், 30 ஆண்டு கால நிறைவினை முன்னிட்டு நினைவுப் பலகையொன்று திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன், அதன் நினைவாக ஸ்டிக்கர் ஒன்றினையும் வெளியிட்டு வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

























