கிழக்கில் 2700 இடங்களில் தொல்பொருள் பதாகைகள்.

 


கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 2700 இடங்களை தொல்பொருள் இடங்களாக அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்திருக்கின்ற மன்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் 19 இடங்களும், போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் 34 இடங்களும் அடையாளப்படுத்தியிருக்கின்றது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்தின் கண்ணபுரம் கிராம மக்களுடனான சந்திப்பின்போதே நேற்று அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தொல்பொருள் திணைக்களம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்கு அண்மையில் வந்த நேரத்தில் அவர்கள் கொண்டு வந்த பதாகைகளை நிறுவுவதற்கு அம்மக்கள் விடவில்லை. அவ்வாறு மக்கள் விட்டிருந்தால் அது தொல்பொருள் திணைக்களத்தால் அடையாளப்படுத்தப்பட்ட இடமாக மாறியிருக்கும். அதன்போது   செயற்பட்ட எமது மக்கள் 55 பேருக்கு வழக்கு போட்டிருக்கின்றார்கள். அது எமது தமிழினத்திற்காக இந்த கண்ணபுரம் மக்கள் எடுத்துக்கொண்ட மாபெரும் பணியாகும்.

 நாங்கள் ஜனநாயகரீதியில் எங்களுடைய ஜனநாயக உரிமைப் போராட்டத்தை செய்து வருகின்றோம். போராட்டத்தின் வடிவம் மாறி இருந்தாலும் அனைவரும் ஒன்றாக சேர்ந்து செயற்படுகின்றோம்.

மக்கள் அன்றைய தினம் மழையையும் பொருட்படுத்தாமல் ஜனநாயகப் போராட்டம் செய்த காரணத்தினால்தான் இந்த பிரதேசத்திலே தொல்பொருள் திணைக்களம் எனும் அடையாளப்படுத்தப்பட்ட பதாகைகளைப் போடப்படவில்லை. 

அவ்வாறு அவர்கள் பதாகைகளை இட்டு தொல்பொருள் இடம் என அடையாளப்படுத்தியிருந்தால் அதன் பின் அப்பகுதிக்குள் எமது மக்கள் சென்று ஒரு சிறிய வேலையைகூட செய்ய முடியாமல் போகும். அங்கு இருக்கின்ற ஆலயத்தில் ஒரு சிற்பத்தை மாற்ற வேண்டும் என்றால்கூட தொல்பொருள் திணைக்களத்தின் அனுமதியை பெறாமல் அதனை மாற்ற முடியாது. 

மாறாக அவர்கள் அனுமதியை தரவும் மாட்டார்கள். அவ்வாறு அனுமதி இல்லாமல் அப்பகுதிக்குள் உள்நுழைந்து அதனை தொட்டால்கூட வழக்கு போடாமல் நேரடியாகவே சிறைச்சாலைக்கு அனுப்புவார்கள். மாறாக பிணைகூட வழங்க மாட்டார்கள்.

கிழக்கு மாகாணத்தில் மொத்தமாக 2700 இடங்கள் தொல்பொருள் இடங்களாக அடையாளப்படுத்தி இருக்கிறார்கள். அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்திருக்கின்ற மன்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் 19 இடங்களும், போரதீவுப் பற்றுப் பிரதேசத்தில் 34 இடங்களும் அடையாளப்படுத்தியிருக்கின்றார்கள்.

பிரதேச சபையில் அனுமதி பெற்ற பின்னர் பதாகைகளை நடுமாறு நீதிமன்றம்  ஒரு தீர்ப்பை தந்துள்ளது. இனிமேல் தொல்பொருள் திணைக்களம் இப்பகுதியில் பதாகைகளை நடுவதற்கு வருவதாக இருந்தால் பிரதேச சபையில் அனுமதி பெற்ற பின்ரேதான் வரமுடியும்.

எதிர்காலத்தில் ஜனாதிபதி வரைக்கும் இந்த செய்தி செல்லக்கூடிய வகையில் மாபெரும் ஜனநாயக போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.

இந்த நிலையில்தான் எனது மாணவர்கள் கல்வி கற்கின்ற பாடப் புத்தகங்களிலும் தமிழர் வரலாறுகள் இல்லை. மாறாக சிங்கள மன்னர்களின் வரலாறுகள்தான் அமைந்துள்ளன. தொல்பொருள் திணைக்களத்தில் வேலை செய்பவர்களும் இவ்வாறான வரலாறுகளை படித்து விட்டுதான் வருகின்றார்கள்.