2025 தேசிய அலைச்சறுக்கு (Surfing) சம்பியன்ஷிப் போட்டிகள் ஹிக்கடுவை ‘மெயின் பொயிண்ட்’ (Main Point) இல் வெற்றிகரமாக நிறைவடைந்தன.

 



ஹிக்கடுவை – இலங்கை அலைச்சறுக்கு சம்மேளனத்தினால் (SFSL) ஏற்பாடு செய்யப்பட்ட 2025 தேசிய அலைச்சறுக்கு (Surfing) சம்பியன்ஷிப் போட்டிகள் ஹிக்கடுவை ‘மெயின் பொயிண்ட்’ (Main Point) இல் வெற்றிகரமாக நிறைவடைந்தன.

 நாட்டின் நிலவிய மோசமான காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இப்போட்டிகள், இவ்வருடத்தின் ஆரம்பத்தில் ஜனவரி 15 முதல் 17 வரை நடத்தப்பட்டன.

இப்போட்டியின் நிறைவு விழாவில் கலந்துகொண்ட இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, இலங்கையை உலகத்தரம் வாய்ந்த நீர் விளையாட்டு மையமாக மாற்றுவதே அரசாங்கத்தின் இலக்காகும் எனத் தெரிவித்தார்.

அலைச்சறுக்கு விளையாட்டை மேம்படுத்த அமைச்சினால் தொடர்ச்சியான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் போட்டிகளில் சிறந்து விளங்கிய இரு இளம் வீரர்களுக்கு சர்வதேச பயிற்சிகள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த போட்டிகளில் பங்கேற்பதற்கான முழுமையான அனுசரணை வழங்கப்படும் எனவும் இங்கு சுட்டிக் காட்டினார்.

இப்போட்டிகளின் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026 ஓகஸ்ட் மாதம் ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான (Asian Games) இலங்கை குழாம் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டிகளில் வெலிகம (Weligama) மற்றும் மெம்போஸ் (Mambos) அலைச்சறுக்கு கழகங்கள் மிகச்சிறந்த திறமைகளை வெளிப்படுத்தின.