இந்தியாவின் ஜார்கண்ட்
மாநிலத்தில் கடந்த 9 நாட்களில் ஒற்றை யானை தாக்கியதில் 20 பேர்
உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை தொடர்பில்
வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் உள்ள
வனப்பகுதிகளில் இந்தச் சோகம் நிகழ்ந்துள்ள நிலையில், அந்த யானையைப் பிடிக்க
வனத்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு
சிங்பூம் மாவட்டத்திற்குட்பட்ட செய்பாசா மற்றும் கோல்ஹான் வனப்பகுதிகளில்
கடந்த ஜனவரி 1 முதல் 9 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இந்த மரணங்கள்
பதிவாகியுள்ளன.
உயிரிழந்த 20 பேரில் வனத்துறை ஊழியர் ஒருவரும் உள்ளடங்குவதாக மாவட்ட ஆட்சியர் சந்தன் குமார் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு
இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள அதேவேளை, பாதிக்கப்பட்ட
பகுதிகளில் 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான உயிரிழப்புகள் இரவு நேரங்களிலேயே நிகழ்ந்துள்ளன.
அறுவடை செய்யப்பட்ட நெல்லை வயல்களிலும் கொட்டகைகளிலும் காவல் காத்துக் கொண்டிருந்தவர்களே இந்த யானையிடம் சிக்கியுள்ளனர்.
ஜனவரி 5 ஆம் திகதி குந்த்ரா பஹோதா
என்பவர் தனது 6 மற்றும் 8 வயதுடைய இரு குழந்தைகளுடன் யானையால் தாக்கப்பட்டு
உயிரிழந்தார். அவரது மனைவி காயமடைந்த 2 வயது மகளுடன் உயிர் தப்பினார்.
மங்கல் சிங் (34) என்பவர் வேலை முடிந்து
வீடு திரும்பும் வழியில் தாக்கப்பட்டார். விஷ்ணு சுண்டி (42) என்பவர் தனது
வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்தபோது யானையால் மிதித்துக்
கொல்லப்பட்டார்.
தற்போது 100 க்கும் மேற்பட்ட வனத்துறை
ஊழியர்கள் ட்ரோன்கள் மற்றும் நவீன கருவிகளின் உதவியுடன் யானையைத் தேடி
வருகின்றனர். அந்த யானை மிகவும் சுறுசுறுப்பாக இயங்குவதாலும், அடிக்கடி
தனது இடத்தை மாற்றுவதாலும் அதனைப் பிடிப்பதில் சிக்கல் நீடிப்பதாக வனத்துறை
அதிகாரி குல்தீப் மீனா தெரிவித்துள்ளார்.
மதநீர் சுரக்கும் பருவத்தில் இருக்கும்
ஆண் யானைகளுக்கு ஹோர்மோன் மாற்றத்தால் ஆக்ரோஷம் அதிகமாக இருக்கும் என்றும்,
இந்த யானை தனது கூட்டத்தை விட்டுப் பிரிந்து வந்திருக்கலாம் என்றும்
முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
வனப்பகுதிகள் சுருங்குவதும், யானைகளின்
வழித்தடங்களில் மனித நடமாட்டம் அதிகரிப்பதுமே இவ்வாறான மோதல்களுக்குக்
காரணம் என ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
தற்போது மக்கள் வீடுகளுக்கு வெளியே
தூங்குவதைத் தவிர்க்குமாறும், தாரை தப்பட்டை முழக்கி யானையின் வருகை
குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





