தமிழக முன்னாள் முதலமைச்சரும் தென்னிந்திய திரைப்பட உலகின் மூத்த நடிகருமான எம்.ஜி.ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) அவர்களின் 109ஆவது பிறந்ததினம் யாழ்ப்பாணத்தில் சிறப்பாக நினைவுகூரப்பட்டது.
யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் குடும்பத்தினரின் ஏற்பாட்டில், யாழ் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ராமச்சந்திரனின் சிலைக்கு முன்பாக இந்த நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வின் போது, கல்வியங்காடு வர்த்தக சங்க தலைவர் அ. கேதீஸ், எம்.ஜி.ராமச்சந்திரனின் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கத்தின் குடும்பத்தினரால் எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் கோப்பாய் சுந்தரலிங்கம் ஆகியோரின் நினைவாக நெய் விளக்குகள் ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது.
எம்.ஜி.ராமச்சந்திரனின் நெருங்கிய நண்பரும் தீவிர ரசிகனுமான யாழ் எம்.ஜி.ஆர் கோப்பாய் சுந்தரலிங்கம், கல்வியங்காடு பகுதியில் தனது சொந்த நிதியில் எம்.ஜி.ஆர் சிலையை அமைத்து, ஆண்டுதோறும் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் இயற்கை எய்தியதையடுத்து, அவரது குடும்பத்தினர் தொடர்ந்து இந்நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிகழ்வில் உள்ளூர் மக்கள், வர்த்தக சங்க உறுப்பினர்கள் மற்றும் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் பலரும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.





