டிட்வா பேரிடரால் மலையகத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வடக்கு மாகாணத்தில் காணி.

 


டிட்வா பேரிடரால் மலையகத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வடக்கு மாகாணத்தில் காணிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 
 
அதன்படி, யாழ்ப்பாணத்தைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும், மானிட பூமிதான இயக்கத்தின் ஊடாக, காணிகள் தேவைப்படுவோருக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
 
இந்த கோரிக்கைக்கமைய, சுமார் 30 பேர் இதுவரையில் விண்ணப்பித்துள்ளதாக, அந்த இயக்கத்தின் இணைப்பாளர் ஒருவர் எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். 
 
அவர்களில் 16 பேர் பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
அதன்படி, பண்டாரவளை - காஹகொல்ல பகுதியைச் சேர்ந்த 10 பேரும், ஹாலி-எல திக்வெல்ல பகுதியைச் சேர்ந்த 04 பேரும், தலவாக்கலையை சேர்ந்த ஒருவரும், வடக்கு மாகாணத்தில் காணியைப் பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். 
 
இவர்கள் அனைவரையும் நாளைய தினம் யாழ்ப்பாணத்துக்கு வரவழைத்து, இலவச காணிகளைப் பெற்றுக்கொடுக்கும் திட்டம் குறித்து தெளிவுபடுத்தவுள்ளதாக, மானிட பூமிதான இயக்கத்தின் இணைப்பாளர் ஒருவர் குறிப்பிட்டார். 
 
மக்களின் ஏகமனதான விருப்பத்துடன், காணிகள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். 
 
அதன்படி, தற்போது புலம்பெயர் தேசங்களில் வசிப்போரின் நன்கொடையில் காணிகள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளன. 
 
அத்துடன், அந்த மக்களுக்கான வீடுகள், அரச நிதியைப் பெற்றும், புலம்பெயர் தமிழர்களின் நிதியுதவியிலும் நிர்மாணிக்கப்படவுள்ளன.