டிட்வா பேரிடரால் முழுமையாக வீடுகளையும், காணியையும் இழந்தவர்கள் தாம் விரும்பிய மாவட்டத்தில் குடியேற ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் .

 


டிட்வா பேரிடரால் முழுமையாக வீடுகளையும், காணியையும் இழந்தவர்கள் தாம் விரும்பிய மாவட்டத்தில் குடியேற முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அவ்வாறு வேறு மாவட்டங்களில் குடியேற விரும்புபவர்களுக்கும், ஒரு கோடி ரூபாய் நிதியை அரசாங்கம் பெற்றுக் கொடுக்கும் என வீடமைப்பு அமைச்சர் சுசில் ரணசிங்க எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

எனினும், உரிய நடைமுறைகளைப் பின்பற்றி, காணி கொள்வனவு மற்றும், வீடமைப்பு பணிகளைக் குறித்த பயனாளர் முன்னெடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த நடைமுறைகள் தொடர்பான இற்றைப்படுத்தப்படும் தரவுகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில், பயனாளி தனக்கான நிதியைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அரசாங்கத்தினால் 2026 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்ட வீடமைப்பு திட்டமும், பேரிடருக்குப் பின்னர் முன்னெடுக்கப்படத் திட்டமிடப்பட்ட வீடமைப்பு நடவடிக்கையும் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அதன்படி, 2026 ஆம் ஆண்டு பாதீட்டு ஒதுக்கீட்டுக்கு அமைய 16,000 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.

அதில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீட்டுத் திட்டங்களும், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான மீள்குடியேற்ற திட்டத்திற்கான வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளன.

இந்த நிலையில், பேரிடருக்குப் பின்னரான வீடமைப்புக்காக குறைநிரப்பு பிரேரணையில் 100 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வீடமைப்பு அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

பேரிடரினால் வீடுகளை இழந்தவர்களுக்கான வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் தொடர்பில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான தகவல்கள் உரிய முறையில் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் அபிலாசைகளுக்கு அமைய வீடமைப்பு தொடர்பான தீர்மானங்கள் இறுதிப்படுத்தப்படும் எனவும் வீடமைப்பு அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.