அம்பாரை
மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகப் பெய்துவரும் தொடர் மழையினை அடுத்து,
கல்முனை பிராந்தியத்தில் டெங்கு நோய் பரவலினைக் கட்டுப்படுத்துவதற்கான
விசேட வேலைத்திட்டங்களை பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவு
தீவிரப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து,
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கள டெங்கு கட்டுப்பாட்டு
உதவியாளர்களுக்கான விசேட வழிகாட்டல் மற்றும் ஆலோசனைக் கூட்டம் நேற்று
முன்தினம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.
கல்முனை
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா
இஸ்ஸடீனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ், பிராந்திய தொற்று நோய்
தடுப்பு பிரிவினால் ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட இந்தக்கூட்டம் பிரதி
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஏ.பி.மசூத் தலைமையில்
இடம்பெற்றது.
கள டெங்கு
கட்டுப்பாட்டு உதவியாளர்கள், கள நடவடிக்கைகளின் போது பின்பற்ற வேண்டிய
புதிய நடைமுறைகள் மற்றும் வழிகாட்டல்கள் குறித்து இங்கு
விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன் டெங்கு நுளம்புகள் பெருகும் இடங்களை
அடையாளம் காணுதல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்குதல் மற்றும்
மழைக்காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவின்
பொறுப்பு
வைத்திய அதிகாரி மருத்துவர் எம்.ஐ.றிஸ்னீன் முத், பிராந்திய மேற்பார்வை
பொது சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர், பூச்சியியல் உத்தியோகத்தர்
கே.ஏ.ஹமீட் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கள உதவியாளர்களுக்குத் தேவையான
ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கினர்.
( வி.ரி.சகாதேவராஜா)







