கடந்த காலங்களில் அரசியல்வாதிகளினால்
முன்னெடுக்கப்பட்ட மோசடிகள் மற்றும் முறையற்ற நிர்வாகம் காரணமாக,
வெளிநாட்டு வேலைவாய்ப்பை நாடுபவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளதாக
இலங்கை உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் சங்கம்
தெரிவித்துள்ளது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற நிதி
மோசடிகள் காரணமாக தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகவும்,
இது வேலை தேடுபவர்களிடையே பெரும் சோர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும்
சங்கத்தின் உறுப்பினர் முஹம்மது அசாம் தெரிவித்துள்ளார்.
இந்த வீழ்ச்சியின் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்களை அனுப்பும் நடவடிக்கை குறிப்பிடத்தக்களவு குறைவடைந்துள்ளது.
அரசாங்கத்துடன் இணைந்து வெளிநாட்டு
வேலைவாய்ப்பு நடைமுறைகளை முறைப்படுத்துவதன் மூலம், அடுத்த ஆண்டில்
தொழிலாளர் பணப்பரிமாற்றத்தை 10 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்த முடியும்
என சங்கம் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.
இதேவேளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி,
இவ்வருடத்தில் இதுவரை 300,000 க்கும்
அதிகமான இலங்கையர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர். அவர்களில் 184,085
ஆண்கள் மற்றும் 116,106 பெண்கள் உள்ளடங்குவர்.
இவர்களில் 194,982 பேர் தங்களது சொந்த முயற்சியிலும், 105,209 பேர் உரிமம் பெற்ற முகவர் நிலையங்கள் ஊடாகவும் சென்றுள்ளனர்.
இந்த ஆண்டின் முதல் 11 மாதங்களில்
தொழிலாளர் பணப்பரிமாற்றம் மூலம் இலங்கைக்கு 7.19 பில்லியன் அமெரிக்க டொலர்
வருமானம் கிடைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





