டிட்வா சூறாவளியினால் ஏற்பட்ட
மண்சரிவுகளில் சிக்கி உயிருடன் புதையுண்டவர்களின் உடல்களைக் கண்டறிவதற்குத்
தேவையான விசேட மோப்ப நாய்களை அனுப்பி வைக்குமாறு இலங்கை அரசாங்கம்
ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த நவம்பர் 28 ஆம் திகதி இலங்கையைத்
தாக்கிய டிட்வா சூறாவளி காரணமாக, முன்னெப்போதும் இல்லாத வகையில் சில
பகுதிகளில் 500 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியது.
இந்த அனர்த்தங்களினால் 600க்கும்
மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், குறிப்பாக மத்திய மலைநாட்டின் பல
மாவட்டங்களில் மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாகப் பெருமளவிலானோர் காணாமல்
போயுள்ளனர்.
இது குறித்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரி ஒருவர்
கருத்துத் தெரிவிக்கையில், காணாமல் போனவர்கள் உயிரிழந்திருக்கலாம் எனக்
கருதப்படும் நிலையில், அவர்களின் எச்சங்களைக் கண்டறியும் தேடுதல் பணிகள்
தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மண்சரிவுகளில் சிக்கி மிகவும் ஆழமாகப் புதையுண்டுள்ள உடலங்களைக் கண்டறிவது பெரும் சவாலாக உள்ளது.
எனவே, அனர்த்தங்களின் போது மனித
எச்சங்களை மோப்பம் பிடிப்பதில் விசேட பயிற்சி பெற்ற மோப்ப நாய்களை
வழங்குமாறு ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனவர்களின் துல்லியமான எண்ணிக்கையை சமர்ப்பிக்குமாறு அந்தந்த மாவட்டச் செயலாளர்களுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.





