மட்டக்களப்பில் ஆழிப்பேரலையின் நினைவாக புதிய கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததானம்-26.12.2025

 

 













































மட்டக்களப்பு புதிய கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், "உயிர் கொடுத்து உயிர் காப்போம்” எனும் தொனிப்பொருளில் சுனாமிப் பேரலையால் உயிர்நீர்த்த உறவுகளின் நினைவாக வருடாவருடம் தொடர்ச்சியாக நடைபெறும் இரத்ததான முகாம் கழகத்தின் தலைவர் ஜெ.சிந்துஜன் அவர்களின் தலைமையில் மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் அமைந்துள்ள நாவலடி ஆரம்ப மருத்துவ சிகிச்சைப்பிரிவில் (கல்லடி திருச்செந்தூர் 01 ஆவது சுனாமி நினைவுத் தூபிக்கு அருகாமையில்) 26.12.2025 இன்று  நடைபெற்றது.

குறித்த இரத்த தான நிகழ்வானது சுனாமி பேரலையில் உயிர் நீத்த உறவுகளின் 21 ஆவது நினைவை முன்னிட்டு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் அதிதிகளாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஸ்ரீநேசன்  மற்றும்  மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் திரு. பிரதீப் களுபஹான (PRADEEP KALUPAHANA)  அவர்களும் கலந்துகொண்டு இரத்த தான முகாமை ஆரம்பித்து வைத்தனர்.

இதன் போது நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகள், அருட் சகோதரிகள், இரத்த வங்கி வைத்தியர் சஞ்சிதா  மற்றும் ஊழியர்கள், இரத்த கொடையாளிகள், கழக உறுப்பினர்கள், பொது மக்களால் சுனாமி பேரலையால் உயிர்நீர்த்த உறவுகளை நினைவுகூர்ந்து தீபச் சுடர் ஏற்றி அஞ்சலியும் பிரார்த்தனையும் இடம்பெற்றது.

அதனைத்தொடர்ந்து  இரத்த கொடையாளிகளால் இரத்த தானம் வழங்கப்பட்டதுடன் அதிதிகள் மற்றும் கழக உறுப்பினர்களால் கொடையாளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதற்கான மரக்கன்றுகளை மட்டக்களப்பு வன பாதுகாப்பு திணைக்களம் வழங்கியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


புதிய கோட்டைமுனை விளையாட்டுக் கழகம் தொடர்ச்சியாக இந்நிகழ்வினை வருடா வருடம் நடாத்தி விளையாட்டு மட்டுமன்றி சமூகசேவை செயற்திட்டங்களிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருப்பது பாராட்டத்தக்கவிடயமாகும்.