மக்களுக்கான அபிவிருத்தி, நலன்புரி நோக்கங்களை மையமாகக் கொண்ட வாழைச்சேனை பிரதேச சபையின் 2026ம் ஆண்டுக்கான பாதீடு 13 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது..

 







 




 

மக்களுக்கான அபிவிருத்தி, நலன்புரி நோக்கங்களை மையமாகக் கொண்ட வாழைச்சேனை பிரதேச சபையின் 2026ம் ஆண்டுக்கான பாதீடு 13 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது... 

(ஆதரவளித்த, எதிர்த்த, நடுநிலை வகித்த அனைவரையும் ஒன்றிணைத்து செயற்படுத்துவோம் என்கின்றார் தவிசாளர் எஸ்.சுதாகரன்) 

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அதிகாரத்திற்குட்பட்ட மட்டக்களப்பு கோரளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச சபையின் 2026ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்புக்கான அமர்வு இன்றைய தினம் (22) பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.சுதாகரன் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த அமர்வில் சபையின் பிரதித் தவிசாளர், உறுப்பினர்கள், சபை செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சபைச் சம்பிரதாயங்களுடன் ஆரம்பிக்கப்பட்ட அமர்வின்போது தவிசாளரினால் 2026ம் ஆண்டுக்கான பாதீடு சமர்ப்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து குறித்த பாதீடு தொடர்பிலான உறுப்பினர்களின் கருத்துகளுக்கு இடமளிக்கப்பட்டு பாதீடு நிறைவேற்றம் தொடர்பில் தவிசாளரினால் வாக்கெடுப்பிற்காக அறிவிக்கப்பட்டது. 

குறித்த வாக்கெடுப்பு பகிரங்க முறையிலா அல்லது இரகசிய முறையிலா என்பது குறித்த வாக்கெடுப்பு முதலில் இடம்பெற்றது. இதன்போது பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் பாதீடு நிறைவேற்றப்பட வேண்டும் என அனைத்து உறுப்பினர்களின் ஏகமனதான தீர்மானத்துடன் பாதீடு பகிரங்க வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.

இதன்போது பாதீட்டுக்கு ஆதரவாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி 10, சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 03, ஐக்கிய மக்கள் சக்தி 03, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 01 உறுப்பினர்கள் என 17 உறுப்பினர்களும், பாதீட்டுக்கு எதிராக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் 04 உறுப்பினர்களும் வாக்களித்திருந்தனர். தேசிய மக்கள் சக்தியின் 04 உறுப்பினர்களும் இதன் போது நடுநிலைமை வகித்ததுடன், முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் சுகயீன விடுமுறை பெற்றிருந்தார்.

இதன் படி கோரளைப்பற்று பிரதேச சபையின் 2026ம் ஆண்டுக்கான பாதீடு 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

குறித்த பாதீடு தொடர்பில் பிரதேச சபைத் தவிசாளர் எஸ்.சுதாகரன் தெரிவிக்கையில்,

முழுக்க முழுக்க பிரதேசத்தின் மக்களுக்கான அபிவிருத்தியையும், நலன்புரி நோக்கங்களையும் கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட பாதீடு இன்றைய தினம் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு 17 உறுப்பினர்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த பாதிட்டில் பிரதேச சபையின் 2026ம் ஆண்டுக்கான உத்தேச வரவாக இருபத்தொன்பது கோடி எண்பத்து மூவாயிரத்து இருநூறு ரூபாய் எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன், உத்தேச செலவீனங்களாக இருபத்தொன்பது கோடி எண்பதாயிரத்து அறுநூறு ரூபாய் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆண்டில் ஊழியர்களில் சம்பளத்தின் 40 வீத பொறுப்பினை சபை ஏற்க வேண்டும் என்ற நிலைப்பாடு மற்றும் ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கான கொடுப்பனவு சபையினால் மேற்கொள்ளப்படுகின்றமை போன்ற சவால்களுக்கு மத்தியில் மக்களுக்கான விடயங்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற உயரிய நோக்கோடு இப்பாதீட்டினை அமைத்துள்ளோம். இப்பாதீட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கிய உறுப்பினர்கள், எதிராக வாக்களித்த மற்றும் நடுநிலை வகித்த உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவிப்பதுடன், விசேடமாக இப்பாதீட்டை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட பிரதேச சபைச் செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

விசேடமாக பிரதேச சபையின் வருமானத்தை அதிகரிப்பதற்கான பல்வேறு வழித்திட்டங்கள் இப்பாதீட்டில் உள்வாங்கப்பட்டுள்ளதுடன், சுற்றுலா விடுதிகளின் வருமானங்களில் இருந்து 1% வீதத்தினை அறவீடு செய்வதற்கான திட்டங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன.

அத்தோடு வட்டார ரீதியான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக கடந்த வருடத்தினை விடவும் 2026ம் ஆண்டுக்காக ஐந்து கோடி நாற்பத்து இரண்டு இலட்சத்து தொன்னூற்று நான்காயிரத்து எண்ணூறு ரூபாய் மேலதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இம்முறை பதினொரு கோடி ரூபாய் வரையில் இவ் ஒதுக்கீடு இடம்பெற்றுள்ளது. இவை பிரதேச சபையின் அனைத்து வட்டாரங்களுக்கும் வட்டார ரீதியில் சமமாகப் பகிர்ந்து அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும்.

மேலும் இப்பாதீட்டுக்கு ஆதரவளித்த, எதிர்த்து வக்களித்த, நடுநிலை வகித்த அனைத்து உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து எதிர்வரும் காலங்களுக்கான அபிவிருத்திகளை முன்னெடுப்போம் என்று தெரிவித்தார்.