2025 ஆம் ஆண்டில் வெளிநாட்டு வேலைகளுக்காக சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை எட்டியது

 




2025 ஆம் ஆண்டில் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை மூன்று இலட்சத்தை (300,000) தாண்டியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதனுடன், 2025 ஆம் ஆண்டில் 3 இலட்சம் இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்பும் இலக்கு வெற்றிகரமாக அடையப்பட்டுள்ளதாகவும் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில், வேலைக்காக வெளிநாடு சென்ற தொழிலாளர்களின் எண்ணிக்கை 300,000 ஐத் தாண்டியது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்னர், 2024 ஆம் ஆண்டில் 314,673 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
இதேவளை, 2025 ஆம் ஆண்டில், வேலைக்காக வெளிநாடு சென்றவர்களில் 184,085 பேர் ஆண் தொழிலாளர்களாகவும், 116,106 பேர் பெண் தொழிலாளர்களாகவும் உள்ளனர்.
அதே காலகட்டத்தில், 194,982 பேர் தங்களது முயற்சியினால் நேரடியாக வெளிநாடு சென்றுள்ளதுடன், 105,209 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகமைகள் ஊடாக வெளிநாடு சென்றுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்களில் அதிக எண்ணிக்கையிலானோர் குவைத்துக்குச் சென்றுள்ளனர். குவைத்துக்கு சென்றவர்களின் எண்ணிக்கை 75,200 ஆக பதிவாகியுள்ளது. இதேவேளை, இரண்டாவது இடத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (துபாய்) காணப்படுவதுடன், அங்கு 57,037 இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர்.
மேலும், தென் கொரியா, இஸ்ரேல், ருமேனியா, ஐக்கிய இராச்சியம், ஆவுஸ்திரேலியா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளில் இலங்கையர்கள் வேலைவாய்ப்பு தேடும் போக்கு கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் அதிகரித்து வருவதாக பணியகத்தின் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.