பொலித்தீன் பைகளை (Shopping Bags) இலவசமாக வழங்குவதைத் தடை செய்து, அவற்றிற்குப் பணம் வசூலிக்கும் அரசாங்கத்தின் புதிய முடிவு அமுலாகியுள்ளது.

 வர்த்தக நிலையங்களில் பொலித்தீன் பைகளை (Shopping Bags) இலவசமாக வழங்குவதைத் தடை செய்து, அவற்றிற்குப் பணம் வசூலிக்கும் அரசாங்கத்தின் புதிய முடிவு  அமுலாகியுள்ளது.

இது குறித்து, நுக
ர்வோர்கள் மற்றும் வர்த்தக நிலையக உரிமையாளர்கள் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

அதற்கமைய "கடைகள் இலவசமாக வழங்க விரும்பினால், அரசாங்கம் ஏன் அதற்கும் பணம் வசூலிக்க வேண்டும்?" என்பது பொதுமக்கள் மத்தியில் நிலவும் முக்கியக் கேள்வியாக உள்ளது.

பொதுமக்கள் கருத்துப்படி, இந்தப் புதிய கட்டணம் அவர்களுக்கு ஒரு சுமையாக உள்ளது. இது குறித்த கருத்து தெரிவித்த பெண் ஒருவர், மக்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கும் பணத்தைக் கொண்டு பொருள் வாங்கும் போது, இலவசமாகக் கொடுக்கப்படும் பொலித்தீன் பைகளுக்கும் பணம் வசூலிப்பது நியாயமற்றது என்று கூறினார்.

அதேநேரம், சட்டங்கள் இல்லாமல் ஒரு நாட்டை உருவாக்க முடியாது என்றாலும், தற்போது ஒரு பை மூன்று ரூபாய்க்குக் கொடுக்கப்பட்டால், அது ஐந்து ரூபாய்க்குக் நுகர்வோருக்கு கொடுக்கப்படும் என்றும் பொதுமகன் ஒருவர் குறிப்பிட்டார்.

அத்துடன். பைகளுக்குப் பணம் வசூலிப்பதை விட, காகிதப் பைகள் (Paper Bags) அல்லது வேறு ஏதேனும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றீட்டைக் கொண்டுவருவது சிறந்தது என்றும் பொதுமக்கள் தரப்பில் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது.

இதேவேளை, அரசாங்கத்தின் இந்த முடிவால் வர்த்தக உரிமையாளர்கள் பெரும் சங்கடத்தை எதிர்கொள்வதாகத் தெரிவித்தனர்.

சிறு கடைகள், பழக்கடைகள் போன்ற இடங்களில் வாடிக்கையாளர்களுக்குப் பைகளைக் கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.

பைகளுக்கான கட்டணத்தை வாடிக்கையாளரிடம் இருந்து கேட்பது கடினம். "நாங்கள் பணம் கேட்டால், வாடிக்கையாளர்கள் கோபப்படுவார்கள். அவர்களால்தான் நாங்கள் வாழ்கிறோம்," என்று வர்த்தகர் ஒருவர் கவலை தெரிவித்தார்.

இந்தக் கட்டண வசூல், வணிகத்தைக் குறைத்துவிடும் என்றும், இது முற்றிலும் நியாயமற்ற செயல் என்றும் வர்த்தகர்கள் கூறுகின்றனர்.

பொலித்தீன் பைகளுக்குக் கட்டணம் அறவிடுவதற்கான முக்கியக் காரணம், நாட்டின் சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அவற்றின் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைப்பதாகும்.

எளிதில் மக்கிப்போகாத ஒருமுறை பயன்படுத்தும் பொலித்தீன் பைகள், இலங்கையில் நீர் ஆதாரங்கள், கடல் மற்றும் நிலம் உட்பட ஒட்டுமொத்த சுற்றுச்சூழலுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

 இந்தச் சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தக் கோரி சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் (CEJ) தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவின் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

 நீதிமன்றத்திற்கு அளித்த உறுதிமொழியின் அடிப்படையில், பொலித்தீன் பைகள் இலவசமாக வழங்குவதைத் தடை செய்து கட்டணம் அறவிடுவதற்கான வர்த்தமானி அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. 

 இந்தக் கட்டண அறவீட்டின் முதன்மை நோக்கம், நுகர்வோர் அதைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, மீண்டும் பயன்படுத்தக்கூடிய பைகளை (Reusable bags) எடுத்து வர ஊக்குவிப்பதன் மூலம் பொலித்தீன் பயன்பாட்டை ஒட்டுமொத்தமாகக் குறைப்பதாகும்.