திருகோணமலை சம்புத்த ஜயந்தி விகாரை பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொறுப்பு நீதிமன்றத்திடம் .

 


 

 திருகோணமலை சம்புத்த ஜயந்தி விகாரை சம்பவம் காரணமாக பௌத்த மதத்துக்குப் பாதிப்பு மற்றும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் எந்த அடிப்படையும் இல்லை என்றும் அந்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொறுப்பு நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு பிரதியமைச்ர் சுனில் வட்டகல பாராளுமன்றத்தில் தெரிவித்தார். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குறித்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.

 பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு , பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், சம்புத்தி ஜயந்தி விகாரை தொடர்பில் நான் அறிந்த வகையில், சுஜீவ சேனசிங்க எம்.பி தெரிவிப்பதுபோல் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்படவில்லை. பொலிஸ் பீ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் படி நீதவான் நீதிமன்ற நீதிபதியால் உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது. அதன் பிரகாரமே தற்போது குறித்த விகாரை தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது. அதனால் இந்த சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு, புத்த மதத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்றும் சிலர் தெரிவிக்க முயற்சிக்கின்றனர். இவர்களின் இந்த குற்றச்சாட்டுகளில் எந்த அடிப்படையும் இல்லை. இந்த பிரச்சினைக்குத் தீர்வுகாண இதனை தற்போது நீதிமன்றத்துக்கு ஒப்படைத்திருக்கின்றோம்.