தலவாக்கலையில் இளைஞன் ஒருவரின் மரணத்துக்கு நீதி கோரி பாரிய போராட்டமொன்று நேற்று இரவு வெடித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்
தலவாக்கலை நகரில் கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் நேற்றுமுன்தினம் இரவு மரணமடைந்தார்.
அதன்போது, குறித்த ஊர்தியை மறித்தவாறு தலவாக்கலை நகர மத்தியில் நூற்றுக்கணக்கான வாகனங்களுடன் மக்களும் சுமார் 45 நிமிடங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் ஏற்பட்ட வாகன நெரிசலைக் கட்டுப்படுத்த சென்ற காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டது.
இறுதியில், தலவாக்கலை காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரி, சம்பவ இடத்துக்கு விரைந்து எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர், விபத்துக்குடன் தொடர்புடைய நபரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாக உறுதியளித்தார்.
இதனை தொடர்ந்து, மக்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு, உடலத்தைக் கொண்டு செல்ல அனுமதித்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 19ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் தலவாக்கலை நகரில் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கொளுத்திக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் மீது, அதிவேகமாக வந்த பாரவூர்தியொன்று மோதியது.
இதனையடுத்து, விபத்தை ஏற்படுத்திய சாரதி வாகனத்துடன், தப்பி ஓடிய நிலையில், படுகாயமடைந்த இளைஞர்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய நபர் கைதுசெய்யப்பட்டு முன்னதாக பிணையில் விடுவிக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரைக் கைது செய்யக் கோரியுமே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.





