மட்டக்களப்பில் அதிகரித்து வரும் போதைப்பொருள் மற்றும் கசிப்பு விற்பனை .

 


மட்டக்களப்பு - கருவப்பங்கேணி மற்றும் திருப்பெருந்துறை பகுதிகளில் போதைப்பொருள் மற்றும் கசிப்பு விற்பனையில் ஈடுபட்ட இருவர் ஞாயிற்றுக்கிழமை (2) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார். 

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில்,  போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தவரின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது 34 வயதுடைய பிரபல வர்த்தகரிடமிருந்து 5 கிராம் 650 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. 

பின்னர், அந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அதன் பின், அங்கிருந்த பெண்கள் உட்பட சிலர் ஒன்றிணைந்து, கைது செய்யப்பட்டவரை அழைத்துச்செல்ல விடாமல், பொலிஸாரை தடுத்து பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

பிறகு அந்த நபரை பொலிஸார் மீட்டு அழைத்துச் சென்றனர்.

அதேவேளை திருப்பெருந்துறை பகுதியிலும் கசிப்பு விற்பனை நிலையத்தை முற்றுகையிட்டபோது அங்கு கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 56 வயதுடைய ஒருவரை 24 போத்தல் கசிப்புடன் பொலிஸார் கைது செய்தனர்.

போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டவரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்காக நீதிமன்ற அனுமதியை கோரியுள்ளது.

கசிப்புடன் கைது செய்தவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.