தூங்கிக் கொண்டிருந்த கணவனை கோடாரியால் தாக்கி கொலை செய்த மனைவி , கணவனின் தகாத உறவு காரணமாம் ?

 


மொனராகலை, மஹகளுகொல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 19 ஆம் கட்டை, கபரகொடயாய பகுதியில் கடந்த செப்டம்பர் 21 ஆம் திகதி அன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கணவன் மீது மனைவி கோடாரியால் தாக்கியதில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கணவன் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (11) அன்று உயிரிழந்துள்ளார்.  

மேற்குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த, நான்கு பிள்ளைகளின் தந்தையான  43 வயதுடைய ஆர்.எம்.காமினி புஷ்பகுமார என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கணவனின் தகாத உறவால் இருவருக்குமிடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், சம்பவ தினத்தன்று கணவன் விவசாய வேலைகளை முடித்து விட்டு, வீட்டிற்கு வந்து அறையில் தூங்கிக் கொண்டிருந்த போது அவரின் தலை மீது மனைவி கோடாரியால் தாக்கியுள்ளார்.   

இதில் படுகாயமடைந்த கணவன் சியம்பலாண்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு,  மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பாக சந்தேக நபரான பெண், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை மஹகளுகொல்ல பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.