தந்தை இராஜபுத்திரனின் இழப்பு பாராளுமன்ற உறுப்பனர் சாணக்கியனுக்கு பேரிழப்பாகவும், ஈடுசெய்ய முடியாததொன்றாகவும் இருக்கும் - (ஜனநாயகப் போராளிகள் கட்சி)




இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களின் தந்தையாரும், பட்டிருப்புத் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் தலைவருமான அமரர் சி.மூ.இராசமாணிக்கம் அவர்களின் புதல்வருமான வைத்தியர் இராசமாணிக்கம் இராஜபுத்திரன் அவர்களின் மறைவுச் செய்தி எம்மல் ஆழ்ந்த கவலையடையச் செய்தது. அவரின் இழப்பு தொடர்பில் அன்னாரின் குடும்பத்தினருக்கும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருக்கும் எமது ஜனநாயகப் போராளிகள் கட்சி சார்பில் ஆறுதலை வெளிப்படுத்துகின்றோம் என ஜனநாயகப் போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்களின் தந்தையின் மறைவு தொடர்பில் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அமரர் இராஜபுத்திரன் தனது தந்தையைப் போன்று தனது மகனையும் தமிழ்த் தேசிய அரசியலில் தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கும் போராட்டத்தினுள் உட்செல்ல அனுமதித்தமை தமிழ் மக்களை மனதில் நிறுத்தி அவர் செய்த அளப்பரிய கடமையாகும். தன் தந்தை விட்டுச் சென்ற கடமையை தனது தனையனும் தொடர வேண்டும் என எண்ணியதன் வெளிப்பாடே பெரும்பான்மை கட்சியின் சார்பில் நின்ற தன் மகனை தமிழ்த் தேசிய பரப்பினுள் ஆழமாக வேறூன்றச் செய்தது.

தன் பாட்டன், தந்தை ஆகியோரின் வழியில் இன்று எமது பாராளுமன்ற உறுப்பினரும், தன் தந்தை காட்டிய பாதையில் தற்போதும் தடம் மாறாமல் தமிழ் மக்களுக்கான தனது பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றார்.

தன் தந்தை மீது அளப்பரிய பாசம் வைத்துள்ள எமது பாராளுமன்ற உறுப்பினர் கடந்த சில மாதங்களாக தன் தந்தையின் சுகயீனம் தொடர்பில் அக்கறை கொண்டு கொழும்பிலேயே நின்று அவரைக் கவனித்து வந்தமையை நாம் அறிவோம். அந்த நிலையில் அமரர் இராஜபுத்திரனின் இழப்பு பாராளுமன்ற உறுப்பனர் சாணக்கியன் அவர்களுக்கு பேரிழப்பாக இருப்பதுடன், ஈடுசெய்ய முடியாத ஒன்றாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

அன்னாரின் ஆத்மா எம் பாராளுமன்ற உறுப்பினரை ஆற்றுப்படுத்த வேண்டும். மேலும் மேலும் ஆசீர்வாதங்களை வழங்கி எமது பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் மக்களுக்கான விடியலைப் பெற்றுத்தர பெருசக்தியாகத் திகழ வேண்டும் என இறைவனைப் பிரார்த்திப்பதுடன் அன்னாரின் ஆத்மா சந்தியடையவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.