எமது
நாட்டின் அந்நிய செலாவணிக்காக கடந்த இருநூறு வருடங்களாக கஷ்டப்பட்டு
உழைத்து வரும் மலையக தொழிலாளிகளுக்கு சம்பள உயர்வை வழங்கும் இந்த
அரசாங்கத்தின் செயற்பாட்டை பரிபூரணமாக வரவேற்கின்றோம் .
இவ்வாறு
கிழக்கு மாகாணத்தில் இருந்து வேள்வி பெண்கள் அமைப்பு மற்றும் பெண்கள்
ஒத்துழைப்பு முன்னணி சார்பாக இன்று (17) திங்கட்கிழமை நடத்திய ஊடகவியலாளர்
சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது .
காரைதீவு மனித அபிவிருத்தி தாபன கேட்போர் கூடத்தில் இவ் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
பெண்கள் ஆமைப்பு சார்பாக எம். ரிலீபா பேகம், பேரின்பராஜா மனோரஞ்சனி, எஸ் தங்கராணி ,ஏ.ஆர். அஸ்பர் ஆகியோர் கருத்து தெரிவித்தார்கள் .
அவர்கள் மேலும் தெரிவிக்கையில் .
பெண்களின்
சமூக பொருளாதார அரசியல் உரிமைகளுக்காக தொடர்ச்சியாக உழைத்து வரும்
நாங்கள், மலையக பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் அரசின் நடவடிக்கையை
பரிபூரணமாக வரவேற்கின்றோம். அதற்காக ஜனாதிபதிக்கு நன்றிகள் கூறுகின்றோம்.
மக்களின்
வரிப்பணம் மக்களையே சென்றடைய வேண்டும். மலையக மக்களும் வரிப்பணம்
செலுத்துகிறார்கள். அதனை அனுபவிக்க அவர்களுக்கு பூரண உரிமை உண்டு.
எதிர்க்கட்சி
என்பதற்காக அனைத்தையும் எதிர்க்கக் கூடாது எதிர்க்கின்ற அரசியல்வாதிகள்
மக்களின் வரிப் பணத்தில் தான் சொகுசாக வாழுகின்றார்கள் என்பதை மறந்து
விடக்கூடாது.
அரசாங்கம் அறிவித்திருக்கின்ற 400 ரூபாய் சம்பள உயர்வு நிச்சயமாக அந்த மக்களுக்கு சென்றடைய வேண்டும் .
அரசின் அசுவெசும கொடுப்பினை கூட மலையக மக்களை சென்றடைவதில் சிக்கல் இருக்கின்றது. அதனையும் இலகுவாக்க வேண்டும்.
இலங்கை
அரசினால் வழங்கப்படும் சகல உரிமைகளும் சலுகைகளும் சகல மக்களுக்கும்
சென்றடைய வேண்டும் அதனை அனுபவிக்க மலையக மக்கள் உள்ளிட்ட சகல மக்களுக்கும்
உரிமை உண்டு.
இதை எதிர்க்கின்ற உரிமை யாருக்குமில்லை.
எனவே
இந்த சம்பள உயர்வை நாங்கள் பூரணமாக ஆதரிக்கின்றோம் இதை கொண்டு வந்த சமகால
அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் நன்றி கூறுகின்றோம்
அரசாங்கம்
பட்ஜெட்டில் அறிவித்துள்ள வருகை கொடுப்பனவானது தோட்டத் தொழிலாளர்களின்
அடிப்படைச் சம்பளத்துடன் சேர்க்கப்பட வேண்டும் என்றும் கோருகின்றோம்.
நிச்சயமாக
இந்த அரசாங்கம் கடந்த கால அரசாங்கங்களை போல் அல்லாது, சொன்னதை சொன்னபடி
செய்யும். இந்த மலையக மக்களுக்கு நிச்சயமாக இது கிடைக்கும் என்று 100%
நம்புகிறோம். என்றனர்.
தாபன இணைப்பாளர் எம்ஐ.றியாலும் சமூகமளித்திருந்தார்.
( வி.ரி.சகாதேவராஜா)







