பங்களாதேஷின் முன்னாள்
பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அவரது அரசாங்கம் கடந்த ஆண்டு மாணவர் தலைமையிலான
போராட்டங்களை வன்முறையாக ஒடுக்கியதில் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை
செய்ததாகக் கூறி, அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் இன்று மரண
தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
78 வயதான தலைமறைவு அரசியல்வாதியான ஷேக்
ஹசீனா, கடந்த ஆண்டு நடந்த போராட்டங்களை ஒடுக்கியதில் "சூத்திரதாரி மற்றும்
முக்கியக் கருவியாக" இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
கடந்த ஆண்டு ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 5,
வரை நடந்த இந்த மக்கள் போராட்டங்கள் ஒடுக்கியதில், சுமார் 1,400 பேர் வரை
கொல்லப்பட்டனர் என்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர் என்றும் ஐக்கிய
நாடுகள் சபையின் அறிக்கை தெரிவிக்கிறது.
தனது 15 ஆண்டுகால 'சர்வாதிகார' ஆட்சியை
முடிவுக்குக் கொண்டுவந்த போராட்டங்களை ஒடுக்குவதற்காக அவர் கொடிய சக்தியைப்
பயன்படுத்த நேரடி உத்தரவுகளைப் பிறப்பித்ததற்கான ஆதாரங்களை வழக்குத்
தொடுநர்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.
அதிகாரத்தை இழந்ததிலிருந்து இந்தியாவில்
தலைமறைவாக இருக்கும் ஷேக் ஹசீனா, நீதிமன்ற உத்தரவுகளை மீறி விசாரணைக்கு
முன்னிலையாகாததால், அவர் தலைமறைவாக இருக்கும் நிலையிலேயே இந்த விசாரணை
நடத்தப்பட்டுத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது தடை செய்யப்பட்டுள்ள ஷேக்
ஹசீனாவின் அவாமி லீக் கட்சி டாக்கா தீர்ப்பாயத்தை "கங்காரு நீதிமன்றம்"
என்று விமர்சித்துள்ளதுடன், தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்துப்
போராட்டம் நடத்துமாறு ஆதரவாளர்களை வலியுறுத்தியுள்ளது.
தீர்ப்பையொட்டி பங்களாதேஷ் முழுவதும்
பதற்றம் நிலவுவதாகவும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சர்வதேச
ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.





