மஸ்கெலியா பேருந்து நிலையப் பகுதியில் நேற்று பெருந்தோட்ட தொழிலாளர்களினால் நடத்தப்பட்ட கண்டனப் போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொழிலாளர்களின் வேதன உயர்வை எதிர்த்து சில அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தில் முன்வைத்த கருத்துகளுக்கு எதிராக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பெருந்தோட்ட தொழிலாளர்கள் பதாகைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பியபடி மஸ்கெலியா நகரின் பிரதான வீதியூடாக பேருந்து நிலையத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
போராட்டத்தின் போது கருத்து தெரிவித்த தொழிலாளர்கள்,
கடந்த 202 ஆண்டுகளாக நாட்டிற்கு அன்னிய செலாவணி பெற்றுத்தரும் பெருந்தோட்ட தொழிலாளர் சமூகம் இன்றளவும் குறைந்த வருமானத்தால் தவித்துக் கொண்டிருக்கிறது.
வரவிருக்கும் ஜனவரி மாதம் முதல் தோட்ட நிர்வாகம் 200 ரூபாவும், அரசாங்கம் 200 ரூபாவும் வழங்கும் வகையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க எடுத்துள்ள முடிவு வரவேற்கத்தக்கது என்றும் தெரிவித்தனர்.
இத்தகைய நியாயமான தீர்மானத்திற்கு எதிராக சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் வாதிடுவது ஏற்க முடியாதது என்று தொழிலாளர்கள் வலியுறுத்தினர்.
தினசரி குளவி கொட்டுக்கு இலக்காகுவது, அட்டை கடிக்கு ஆளாகுவது, வனவிலங்கு மற்றும் பாம்பு கடிக்கு உள்ளாகுவது போன்ற அபாயங்களை எதிர்நோக்கியும் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் தியாகத்தை அரசியல் வாதிகள் புரிந்துகொள்ள வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
உலகம் முழுவதிலும் தனிச்சிறப்பைப் பெற்றுள்ள சிலோன் தேயிலை உற்பத்தியில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் பங்களிப்பு மறுக்க முடியாதது என்றும், இனிவரும் காலங்களில் அவர்களுக்கு உரிய மரியாதையும் உரிமைகளும் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
பெருந் தோட்ட மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உரிமைகளுக்கு எந்த அரசியல் வாதியும் எதிராக பேச கூடாது என்று தொழிலாளர்கள் கடுமையாக எச்சரித்தனர்.
அத்துடன் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதனத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் குரல்கொடுத்த அரசியல்வாதிகளின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.







