பதுளை - மஹியங்கனை, சங்கபோபுர பிரதேசத்தில் கணவரை கொலை செய்த குற்றச்சாட்டில் மனைவியும் அவரது காதலனும் மஹியங்கனை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் சங்கபோபுர பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடைய மனைவியும் 55 வயதுடைய காதலனும் ஆவர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மஹியங்கனை, சங்கபோபுர பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய கணவர் காணாமல்போயுள்ளதாக மனைவி ஒக்டோபர் 17 ஆம் திகதி மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், காணாமல்போன கணவர் ஒக்டோபர் 24 ஆம் திகதி கிராதுருகோட்டை, உல்ஹிட்டிய நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சடலமாக மீட்கப்பட்ட கணவரின் மனைவியின் காதலன் நேற்று மஹியங்கனை பொலிஸ் நிலையத்துக்கு சென்று குறித்த மரணம் கொலை என வாக்குமூலம் வழங்கி பொலிஸில் சரணடைந்துள்ளார்.
சடலமாக மீட்கப்பட்டவரின் மனைவியும் தானும் நீண்ட நாட்களாக தகாத உறவில் ஈடுபட்டிருந்ததாகவும் இருவரும் இணைந்து இந்த கொலையை செய்ததாகவும் காதலன் பொலிஸில் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபர்களான மனைவியும் காதலனும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





