போதைப்பொருள் குற்றச்சாட்டு - மேன்முறையீட்டு நீதிமன்றம் ஐவருக்கு மரணதண்டனை உறுதி செய்தது

 


இலங்கை கடற்படையால் கண்டறியப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் கையிருப்பாக இருந்த 151.341 கிலோகிராம் ஹெரோயின் (அப்போது) கடத்தலுடன் தொடர்புடைய ஐவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தியுள்ளது. 
 
நீதிபதி பிரதீப் ஹெட்டியாரச்சி மற்றும் நீதிபதி பி. குமாரரத்தினம் ஆகிய இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்தக் குற்றவாளிகள் மீதான தீர்ப்பை உறுதி செய்தது. 
 
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லே 2023 செப்டம்பர் 27 அன்று வழங்கிய தீர்ப்பை இந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது. 
 
மேல் நீதிமன்றம் குற்றப்பத்திரிகையில் உள்ள மூன்று குற்றச்சாட்டுகளிலும் ஐந்து நபர்களையும் குற்றவாளிகளாகக் கண்டறிந்து, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் மரண தண்டனையை விதித்திருந்தது. 
 
சதி செய்தல், கடத்துதல், வைத்திருத்தல் மற்றும் 152.341 கிலோகிராம் ஹெரோயினை விற்பனை செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டன. 
 
கட்டுவ, நீர்கொழும்பைச் சேர்ந்த சமிந்த ரோஹன பெர்னாண்டோ, அன்டன் கிறிசாந்த பெர்னாண்டோ, துலாக் ரவீந்திர பெரேரா, லியனாதுரகே சுரங்க மற்றும் தரிந்து ஜயந்த பெர்னாண்டோ ஆகிய ஐந்து பேருமே தண்டனை உறுதி செய்யப்பட்டவர்களாவர். இவர்கள் 2019 நவம்பர் 2 ஆம் திகதி 'புத்திம' என்ற பல நாள் மீன்பிடிப் படகில், தென் கடல் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.