அன்புள்ள அனுர அவர்களே கருணை மிகு ஹரினி அவர்களே ஆசிரியராகும் எங்கள் பணியை உறுதிப்படுத்தி தாருங்கள் - மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்!!
ஐந்து வருடங்கள் பொறுத்தது போதும் அனைவரும் ஒன்றிணைவோம் எனும் தொனிப்பொருளில் இலங்கை பட்டதாரிகள் சங்கதினால் இன்று மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டப்பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
இலங்கை பட்டதாரிகள் சங்கதின் தலைவர் கணேசன் அனீரன் தலைமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியானது திருமலை வீதி சுற்றுவட்டத்தில் இருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பு நகரில் உள்ள காந்தி பூங்காவை சென்றடைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.
மட்டக்களப்பில் உள்ள ஐந்து கல்வி வலயங்களிலும் ஆசிரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடந்த ஐந்து வருடங்களாக கடமையாற்றிவரும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுமார் 200 இற்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு குறித்த ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தனர்.
ஐந்து வருட அநீதிக்கு நியாயம் வேண்டு, போட்டிப் பரீட்சை மட்டும்தான் தகுதியா?, அரசே பாடசாலையில் ஆசிரியர் பணி புரிந்து பல மாற்றங்களைக் கொண்டு வந்த எமக்கு ஆசிரியர் நியமனம் வழங்கு, மாணவர்களின் உள்ளங்களைப் புரிந்து கொண்ட எங்களை ஏமாற்றாதே!, ஜனநாயகம் மலர நீதி வழங்கு, அன்புள்ள அனுர அவர்களே கருணை மிகு ஹரினி அவர்களே ஆசிரியராகும் எங்கள் பணியை உறுதிப்படுத்தி தாருங்கள் போன்ற வாசகங்களை ஏந்தியவாறு, கோசமிட்டபடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை பூராகவும் 16600 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பாடசாலைகளில் இணைக்கப்பட்டு கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டு வருவதுடன், இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களில் 1400 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



.jpeg)






