சுற்றுலா சென்று திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

 



சிலாபம் முனேஸ்வரம் ஆலயத்திற்கு சென்ற நிலையில் தெதுரு ஓயாவில் குளிக்கச் சென்ற போது உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது.

கிரிபத்கொட பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

10 பேர் கொண்ட உறவினர்கள் குழு ஒன்று நேற்று தெதுரு ஓயாவில் குளிக்க சென்ற போது இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களின் நான்கு சகோதரர்கள் அடங்குவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள்  கொழும்பு கிராண்ட்பாசை சேர்ந்த 16 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தக் குழு காலையில் மாகொலவில் இருந்து சிலாபத்திற்கு சுற்றுலா சென்று திரும்பிய போது தெதுரு ஓயாவில் குளிக்கச் சென்றனர்.

அந்தப் பகுதி பாதுகாப்பற்ற இடம் என ஒரு பெரிய பலகை வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது குளித்துக் கொண்டிருந்த சுமார் 10 பேரில் 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் 5 பேர் உள்ளூர்வாசிகளால் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 இந்த அனர்த்தத்தின் போது காப்பாற்றப்பட்ட சிறுவன் ஒருவர் தகவல் தருகையில்,

 “முதலில் மாரவில தேவாலயத்தை பார்வையிட வந்தோம். பின்னர் முன்னேஸ்வரன் ஆலயத்திற்கு சென்று இங்கு வந்து சாப்பிட்ட பின்னர் குளித்தோம். அதிக தண்ணீர் இல்லை. எனினும் நான் ஒரு அடி கால் வைத்தவுடன் இழுத்து செல்லப்பட்டேன். மூத்த சகோதரர் என்னை இழுத்து காப்பாற்றினார். ஏனையவர்களை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.