இலங்கை ஆயுர்வேத மருத்துவ சேவையை வலுப்படுத்தும் நோக்குடன், நாளை 303 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

கொழும்பு மாவட்டச் செயலக அரங்கில் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.

2018 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆயுர்வேதத் துறையில் நடைபெறும் மிகப்பெரிய ஆட்சேர்ப்பு இதுவாகும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார மருத்துவ அதிகாரிகள் உள்ளடங்கிய இந்தப் புதிய நியமனங்கள், உள்நாட்டு ஆயுர்வேத சேவையை மேம்படுத்துவதையும், நோயாளிகளுக்கான சிகிச்சையைச் செம்மைப்படுத்துவதையும் இலக்காகக் கொண்டுள்ளன. 

சிரேஷ்ட ஆயுர்வேத நிபுணர்களிடம் விரிவான பயிற்சி பெற்ற இந்தப் பட்டதாரிகள், நாட்டின் மத்திய அரசு மற்றும் மாகாண ஆயுர்வேத வைத்தியசாலைகளில், குறிப்பாகச் சிறுநீரகம் தொடர்பான நிலைமைகள் உட்படத் தொற்று மற்றும் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கவனம் செலுத்தும் வகையில் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.