மொரட்டுவ பகுதியில் உள்ள பாடசாலையைச் சேர்ந்த 14 வயது மாணவர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் கைதான ஆசிரியர் ஒருவரை எதிர்வரும் டிசம்பர் மாதம் 01 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மொரட்டுவ நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், இந்தச் சம்பவத்தை மறைத்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை, தலா இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.
மொரட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒரு பிரபலமான பாடசாலையில் 14 வயது மாணவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானமை தொடர்பில், அந்தப் பாடசாலையின் ஆசிரியரொருவரும், சம்பவத்தை மூடிமறைத்தமை தொடர்பில் அதிபரும் அண்மையில் மொரட்டுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் பதுரலிய மற்றும் பிலியந்தலை பகுதிகளைச் சேர்ந்த 58 மற்றும் 59 வயதுடையவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியர், பாடசாலை போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பொறுப்பு ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
இவருக்கு எதிராக மேலும் பல முறைப்பாடுகள் இருப்பதாகவும் குறிப்பிடப்படுகிறது.





