நாட்டின் சிறைச்சாலைகளின் கொள்ளளவு 10,750 ஆக இருக்கும் நிலையில், சுமார் 37,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்- நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க

 


இலங்கையின் சிறைச்சாலைகளில் நிலவும் கட்டுக்கடங்காத நெரிசல் மற்றும் அதன் காரணமாக கைதிகள் எதிர்கொள்ளும் மனிதநேயமற்ற நிலைமைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பல விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கான செலவு தலைப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு அவர் இந்த விடயங்களை முன்வைத்தார்.


நாட்டின் சிறைச்சாலைகளின்  கொள்ளளவு 10,750 ஆக இருக்கும் நிலையில், சுமார் 37,000 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அதிகப்படியான நெரிசல் நிலைமை காரணமாக, சிறைச்சாலைகளின் நிலைமை மிக மோசமாக உள்ளது.

 இரவு நேரங்களில் சுமார் 500 கைதிகள் நிற்கின்ற நிலையிலேயே உறங்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


கைதிகளுக்குப் போதுமான கழிப்பறைகள் வசதிகள் இல்லை என்றும், இந்த நிலை நீடித்தால் எந்த நேரத்திலும் சிறைச்சாலைகளில் பாரிய குழப்பங்கள் வெடிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அண்மையில் ஒரு கைதி CRP சிறைக்கூடத்தின் பெரிய மதிலைத் தாண்டித் தப்பிச் சென்றதாகவும், இந்தச் சம்பவத்தின்போது இருவர் காயமடைந்ததாகவும், தப்பிச் சென்ற கைதியை இன்றுவரைப் பிடிக்க முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அதேநேரம், சிறைச்சாலைகளில் 10,750 கைதிகளுக்குப் போதுமான அதிகாரிகளே உள்ள நிலையில், அவர்களால் 37,000க்கும் மேற்பட்ட கைதிகளைக் கட்டுப்படுத்த வேண்டிய சூழல் உள்ளதாகவும் தெரிவித்தார்.

சிறைச்சாலைக் காவலர்கள் 24 மணி நேரம் வேலை செய்யும் கட்டாயத்தில் உள்ளதாகவும், இது அவர்களின் செயல்திறனையும் உளவியலையும் கடுமையாகப் பாதிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.


இந்த பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுகாண, மேலும் பல சிறைக் கட்டடங்கள் மற்றும் சிறைக்கூடங்களை கட்டியெழுப்ப உடனடியாகத் விலைமனுக்கள் கோரப்பட வேண்டும் என்றும், இதன் மூலம் நெரிசலைக் குறைக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க வலியுறுத்தினார்.