ஏக்ய ராஜ்ய என்ற ஒற்றையாட்சி வரைபை உருவாக்க இலங்கை தமிழ் அரசுக் கட்சி பெரும் பங்கு வகித்தது, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டி உள்ளார்.

 


ஒற்றையாட்சிக்குள் இலங்கையை முடக்கும் நோக்குடனேயே இலங்கை தமிழரசுக் கட்சி, 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு கோருவதாக பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டி உள்ளார். 38 வருடமாக நடைமுறைப்படுத்தாமல் கிடப்பிலுள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு தற்போது தமிழரசுக் கட்சி கோருவதில் பாரிய சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவர் சி.வீ.கே.சிவஞானம் அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் (06) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றிக் குறிப்பிட்ட அவர்;

நாட்டில், 38 வருடமாக 13ஆவது திருத்தம் அமுல்படுத்தப்படவில்லை.13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த, அனைவரும் இணங்கியுள்ளதாக சி.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.இதற்காக சி.வீ.கே.சிவஞானத்திற்கு நன்றி சொல்ல வேண்டும். தமிழ் தேசிய மக்கள் முன்னணியை தவிர அனைத்து தரப்புக்களும் போருக்கு பிந்தைய காலத்தில் ஒற்றையாட்சிக்கு இணங்கியிருந்தன. ஒற்றையாட்சிக்குள் முடக்கப்பட கூடாது. 13ஆவது ஷரத்தை ஆரம்ப புள்ளியாக கொண்டு நகர்த்த முடியாது எனக்கூறியே தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறினோம்.எமது உண்மையான நிலைப்பாடுகளை மறைப்பதற்கு கடந்த காலங்களில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஒற்றையாட்சியை நாங்கள் ஏற்றுள்ளதாகவும் அவர்கள் சமஷ்டியை விரும்புவதாகவும் இவர்கள் பொய்யுரைத்தனர்.

நல்லாட்சி அரசாங்கத்தில் 2015 – 2019 காலத்தில் செய்யப்பட்ட ஏக்ய ராஜ்ஜிய வரைபை திருத்தி அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றபோவதாக தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி பிரதிநிதிகள் சுவிட்சர்லாந்தில் தெரிவித்தனர்.

ஏக்ய ராஜ்ய என்ற ஒற்றையாட்சி வரைபை உருவாக்க இலங்கை தமிழ் அரசுக் கட்சி பெரும் பங்கு வகித்தது.இவ்வாறான தற்போதைய சூழலில் 13 ஐ கொண்டு வந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைவர் சொல்கிறார்.