குழந்தைப் பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு காசல் வீதி மருத்துவமனை புதிய நம்பிக்கை வழங்குகிறது .

 


 காசல் வீதி மகப்பேற்று மருத்துவமனையில் விந்து தானத்திற்கு மேலதிகமாக, பெண்களுக்காக கருமுட்டை தானம் செய்யும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளதாக மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித தந்தநாராயண தெரிவித்துள்ளார்.

குழந்தைப் பாக்கியம் எதிர்பார்த்திருக்கும் சில பெண்களுக்கு, கருத்தரிக்கும் நிலையில் செயலில் உள்ள ஆரோக்கியமான கருமுட்டைகள் இல்லாத காரணத்தினால் அவர்களின் எதிர்பார்ப்புகள் சிதைந்து போகின்றன. 

இந்தக் கனவுகளை நனவாக்கும் நோக்குடன், ஆரோக்கியமான கருமுட்டைகள் உள்ள பெண்களிடமிருந்து கருமுட்டைகளைப் பெறும் கருமுட்டை தானம் செய்யும் திட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனைப் பணிப்பாளர் வைத்தியர் அஜித தந்தநாராயண தெரிவித்தார்.

தானமாகப் பெறப்படும் கருமுட்டைகள், சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவரின் விந்துடன், வெளிச் சூழலில் ஒரு விசேட ஊடகத்தில் கருக்கட்டலுக்கு (IVF - In Vitro Fertilisation) உட்படுத்தப்பட்டு, இவ்வாறு உருவாகும் கரு தாயின் கருப்பையில் வைக்கப்படும். 

 இந்த IVF தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, குழந்தைகள் இல்லாத இளம் திருமணமான தம்பதிகளுக்காக இந்த விசேட வேலைத்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இந்த IVF மையத்துக்கான கட்டட வசதி மற்றும் பயிற்சி பெற்ற ஊழியர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும், மருத்துவர்கள் வெளிநாடுகளில் விசேட பயிற்சிகளைப் பெற்றுள்ளதாகவும் பணிப்பாளர் கூறினார். 

2018 ஆம் ஆண்டிலேயே தொடங்கத் தீர்மானிக்கப்பட்ட இந்தச் சேவைக்காக, தற்போது வரை சுமார் 1,700 திருமணமான தம்பதிகள் பதிவு செய்துள்ளனர்.

குழந்தை பிறக்கக்கூடிய வயதைக் கடந்து செல்லும், முன்னதாக பதிவு செய்துள்ள பெண்களுக்குச் சேவைகளை வழங்க, இந்த மையம் விரைவில் திறக்கப்படும் என்றும், இந்த விடயத்தில் ஜனாதிபதியின் கவனம் திரும்பியிருப்பதால், விரைவான ஆரம்பம் சாத்தியமாகும் என்றும் பணிப்பாளர் அஜித் தந்தநாராயண நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், மையத்துக்குத் தேவைப்படும் உபகரணங்களை நன்கொடையாக வழங்க விரும்புவோர் தம்முடன் தொடர்புகொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.