அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட புறத்தோட்டம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு உட்புகுந்த காட்டு யானைகள் பயன்தரக்கூடிய 33 தென்னை மரங்களை அழித்து நாசப்படுத்தியுள்ளன.
மேற்படி பகுதியிலுள்ள உபைதுல்லா என்பவருக்கு சொந்தமான காணிக்குள் உட்புகுந்த மூன்று காட்டு யானைகள் காணியில் பராமரிக்கப்பட்டு வந்த சுமார் 33 பயன்தரும் தென்னை மரங்களை அழித்து நாசப்படுத்தியுள்ளன.
காணிக்குள் உட்புகுந்த காட்டு யானைகள் இப்பகுதியிலுள்ள வீடுகளுக்குச் செல்ல முற்பட்ட போதிலும் மக்கள் வீதிகளுக்கு வந்து வெடில் சுட்டு யானைகளை விரட்டியுள்ளனர். இதன் மூலம் இன்னும் பாரிய அழிவுகள் தடுக்கப்பட்டுள்ளதாக கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர். குறித்த அட்டாளைச்சேனை பிரதேச சபை அமைந்துள்ள புறத்தோட்டம் பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும், இதற்கு பிரதான காரணம் பிரதேச சபையின் அருகில் உள்ள தனியார் காணியொன்றில் பிரதேச சபையினால் தொடர்ச்சியாக குப்பைகள் கொட்டப்பட்டு வருவதேயாகும் என பாதிக்கப்பட்ட தென்னம் தோட்ட உரிமையாளர் கவலையுடன் கருத்துத் தெரிவித்தனர்.
மேலும், எல்லைப்பகுதியில் யானை வேலிகள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் நீண்டகாலமாக முன்வைத்துள்ள போதிலும், இதுவரை யானை வேலிகள் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.





