Work Force Sri Lanka நிகழ்ச்சித் திட்டம் தொடர்பாக மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தெளிவூட்டும் முழு நாள் செயலமர் மட்டக்களப்பில் இடம் பெற்றது.

 



மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களம் Work Force Sri Lanka எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் உயர் தர மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சித் திட்டத்தினை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது தொடர்பாக கிழக்கு மாகாண மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மண்டபத்தில் முழு நாள் நிகழ்வாக இன்றைய தினம் (01) திகதி இடம்பெற்றது.

இந்நிகழ்வினை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளிதரன் அவர்கள் ஆரம்பித்து வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்ட மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான இணைப்பாளர் வி.மைக்கல் கொலின் அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த செயலமர்விற்கு வளவாளராக
அம்பாரை மாவட்ட மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.நிப்றாஸ் கலந்து கொண்டு செயலமர்வினை திறம்பட நடாத்தியிருந்தார்.

தற்போதைய தொழிற்துறைகளிற்கு ஏற்றாற்போல் உயர்தரத்திற்கு பின்னர் மாணவர்களை எவ்வாறு தயார்படுத்த வேண்டும் எவ்வாறான தொழிற்துறையினை அவர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தொடர்பான விடையங்கள் உள்ளிட்ட மேலும் பல விடையங்கள் இதன் போது தெளிவுபடுத்தப்பட்டதுடன், நிகழ்நிலை ஊடாக மனித வள வேலை வாய்ப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் சிரோமாலி அவர்களும் உத்தியோகத்தர்களை தெளிவூட்டியிருந்தார்.

இச்செயலமர்வில் மட்டக்களப்பு, அம்பாரை மற்றும் திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்த மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.