மாணவர்கள் பல்வேறு மன அழுத்தப் பிரச்சினைகளுக்கு உள்ளாகி வருவதுடன் அவற்றில் இருந்து மீள முடியாத நிலையிலும் காணப்படுகின்றனர். அதிலிருந்து அவர்களை மீட்டு அவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கு நல்ல சூழலை ஏற்படுத்திக் கொடுக்க ஆசிரியர்கள், பெற்றோர், புத்திஜீவிகள் என பலரும் வழிகாட்ட வேண்டும்.
இவ்வாறு கொழும்பு MIU பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் உளவியல்துறை சிரேஷ்ட. விரிவுரையாளரும், உளசமூக வலுவூட்டல் வளவாளரும், இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினருமான செபமாலை பிரான்சிஸ் தெரிவித்தார்.
செப்டெம்பர் 10 , உலக தற்கொலை தடுப்புத் தினம் வாரத்தினை முன்னிட்டு, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட நெல்லூர் கலைமகள் வித்தியாலயத்தில் ஆசிரியர்களுக்கான உளவலுவூட்டல் நிகழ்வு ஒன்று பாடசாலை அதிபர் திரு. பா. லோகேஸ்வரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட வாறு கூறினார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மாணவர்களின் மனநல பிரச்சினைகளை துல்லியமாக கண்டறியும் ஆற்றல் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் ஆற்றல்மிக்க உள ஆளுமை கொண்ட மாணவர்களை உருவாக்க முடியும். அதற்கு சிறந்த உளவள வழிகாட்டல் பயிற்சிகள் ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் வழங்கப்பட வேண்டும் என்றார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
மாணவர்கள் சிறந்த உளவியல் அறிவைப் பெற்று அவர்களை நல்ல ஆளுமையில் உருவாக்க வேண்டும் என்பதற்காகவே மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏனையோருக்கும் இலவச உளவியல் வழிகாட்டல் பயிற்சிகளை கொழும்பு MIU பல்கலைக்கழகம் இன்று முன்னெடுத்துள்ளது
அதன் மூலம் எமது சமூகத்தில் உளவியல் வளம் சார்ந்த கற்கை பயிற்சிகளை கற்றறிந்த ஆசிரியர் சமூகம் உருவாக வேண்டும் என்பதுடன்
ஆரோக்கியமான மாணவர் சமூதாயத்தை உருவாக்கி அவர்கள் மூலம் நாளைய தலைமுறையினருக்கும் உளவியல் வளம்சார்ந்த கல்வி சென்றடைய வேண்டும் என்பதே எமது பிரதான நோக்கமுமாகும்.
அதற்காகவே மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்துவதற்கும், பெற்றோர்களின் புரிந்துணர்வை வளர்ப்பதற்குமான இலவச உளவியல் கல்வி வழிகாட்டல் கருத்தரங்குகளை நடத்தி வருவதுடன் உளவியல் ஆதரவினையும் வழங்கிக் கொண்டு தேவைப்படின் வைத்திய ஆலோசனைகளையும் பெற்றுக் கொடுத்து வருகின்றோம் .
எனவே பாடசாலைகள் உட்பட அரச அரசசார்பற்ற அமைப்புக்கள் என அனைவரும் எமது இலவச உளவியல் வழிகாட்டல் சேவையை பெற்றுக்கொள்ள விரும்பினால் நாம் அதனை ஆக்கபூர்வமான பயிற்சி மூலம் நிறைவேற்ற தயாராகவும் உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.