" தவறான முடிவுகளைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைவோம் " எனும் தொனிப்பொருளிலான உள வலுவூட்டல் நிகழ்வு மட்டக்களப்பு நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் இடம் பெற்றது.





மன அழுத்தத்தை ஏற்படுத்துகின்ற பிரச்சினைகள் தொடர்ச்சியாகக்  காணப்படின்  இரகசியத்தை பாதுகாத்து எம்மை சரியாக வழிகாட்டக் கூடிய  நம்பிக்கையான ஒருவரிடம் மாணவர்கள் மனம்விட்டுப் பேசுவது அவசியமா னதாகும். இல்லையேல் பாரிய மன அழுத்தமாக மாறி எமது மகிழ்ச்சியான வாழ்க்கை முறையை சீர்குலைத்து விடுவதுடன்  எம்மை தவறான முடிவுகளுக்கும் இட்டுச் செல்லும்.

இவ்வாறு கொழும்பு MIU பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும்  உளவியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், உளசமூக வலுவூட்டல் வளவாளரும், இலங்கை மனித உரிமைகள் அமைப்பின்  உறுப்பினருமான திரு. செபமாலை பிரான்சிஸ் தெரிவித்தார்.

செப்டெம்பர் 10 ,உலக தற்கொலை தடுப்புத் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு  மேற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட  நாவற்காடு நாமகள் வித்தியாலயம் தேசிய பாடசாலையில்  ஏற்பாடு செய்யப்பட்ட " தவறான முடிவுகளைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைவோம் " எனும் தொனிப்பொருளிலான உள வலுவூட்டல் நிகழ்வு நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில்  பாடசாலையின் அதிபர், திரு. இ.தியாகரெட்ணம்  தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

மாணவர்கள் தவறான முடிவுகளில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியான கற்றல்  செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமாக இருந்தால் அடிப்படை உளநல  விழிப்புணர்வு குறித்து அறிந்திருத்தல் வேண்டும். அதற்கு உளவியல் கல்வி  அவசியமான ஒன்றாகும்

ஆளுமைமிக்க மாணவர்கள் உருவாக. மாணவர்கள் உருவாக்கப்படுவதற்கு  ஆரம்ப உளநலம் குறித்து அக்கறை காட்டப்படல் வேண்டும். அப்போதுதான் அவர்கள் நேர்மறை எண்ணத்துடன் பிரச்சினைகளை எதிர்கொள்கின்ற திறனையும் வளர்த்துக்கொள்ள முடியும். இல்லையேல் எதிர்மறை எண்ணங்கள் நம்பிக்கையில்லாத் தன்மையை மனதில் உருவாக்கி நாளாந்த செயற்பாடுகளில் அக்கறையின்மையை ஏற்படுத்தி மகிழ்ச்சியான வாழ்க்கையை சீர்குலைத்து பாரிய மனச்சோர்வுக்கும் உள்காகிவிடும் நிலை ஏற்படும் என்றார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

மாணவர்களைப் பொறுத்தவரையில் உளநல விழிப்புணர்வு மிகவும் முக்கியமானதாகும்.  இன்று நாம் உலகலாவிய ரீதியில் அவதானிக்கும் போது மாணவர்கள் மட்டுமல்லாது ஏனையோர்களும் தவறான முடிவை நோக்கிச் செல்வதற்கு உளநல விழிப்புணர்வு இன்மையே பிரதான காரணமாக உள்ளதை அறியக் கூடியதாக உள்ளது.

நாளைய சமூகத்திற்கு நற்பிரஜைகளாக வரவிருக்கும் மாணவர்கள் உடல், உள, சமூக, ஆன்மீக,  அறிவு  ரீதியில் நன்நிலை பெற்று விளங்குவதோடு மற்றவர்களையும் உளசுகாதார வாழ்க்கை முறைக்குள் கொண்டு வருவதற்கு உளநல கல்வியை பெற்று தம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். அப்போதுதான் ஏற்படுகின்ற   சவால்களை ஆரோக்கியமான முறையில்   எதிர்கொண்டு அறிவு, திறன், மனப்பாங்கிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி திறந்த மனப்பான்மையுடன்  திகழ முடியும்.

இன்று தவறான முடிவுகளை எடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன் இது ஒரு  உலகலாவிய சுகாதாரப் பிரச்சினையாகவும் உருவெடுத்துள்ளது சுகாதாரத்துறைக்கு சவாலாக மாறிவருகின்றது

அது மாத்திரமல்லாது அனைவரும் பல்வேறுபட்ட உளநலப் பிரச்சினைகளுக்கு உள்ளாகி அதனை எதிர்கொள்ள முடியாமல் உள நோய்க்கும் உள்ளாகி சிகிச்சை பெறவேண்டிய நிலை  அதிகரித்து வருகின்றது.

உள ஆளுமையுடன் திகழ வேண்டிய இளம் மாணவ சமூதாயம் உட்பட அனைவரும் உளநலம் இன்றி வாழ்க்கை ஆற்றல் திறன் அற்றவர்களாகவே உருவாகி  சிகிச்சை  பெறும் நிலைக்கு தள்ளப்படுவது குறித்து  நாம் அனைவரும் சிந்திக்க வேண்டிய ஒரு நாளாகவே  செப்டெம்பர் 10 உலக தற்கொலை தடுப்பு நாள்  நமக்கு  வலியுறுத்துகின்றது.  

தொடர்ந்தும் கருத்து கூறிய அவர்,

போட்டி நிறைந்த கல்விச் சூழலில் பாடசாலையினாலும் பெற்றோரினாலும் ஏற்படும் கடுமையான அழுத்தங்கள்  காரணமாகவும் மாணவர்கள்  மன அழுத்தத்திற்கு உள்ளாகும் நிலை காணப்படுகின்றது. இதில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.

மாணவர்களின் உளவியல் தேவைகள் திறம்பட நிவர்த்தி செய்யப்பட போதுமான வளங்களும்  ஆதரவும்  இருக்க வேண்டும். இல்லையேல் எதிர்காலத்தில் உள ஆளுமை அற்ற கற்றறிந்த சமூகம் உருவாகிச் செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

குறிப்பாக வலுவான ஆதரவு வலையமைப்பை உருவாக்கி  மனநல சேவைக்கான புரிந்துணர்வு, அணுகுமுறைகள் அதிகரிக்கப்பட. வேண்டும்.

 எனவே தற்கொலை தடுப்பு நாளினை நினைவு கூறுவதுடன்  மாத்திரம் நின்று விடாது தவறான முடிவுகள் தடுக்ககூடிய சம்பவம்  என்ற எண்ணத்துடன் உள நல  அறிவை தொடர்ந்து  கற்று  நாம் சமூகத்தின்பால் எமது நேர்மறை சிந்தனையுடன் நகர்ந்து ஏனையோரையும்  விழிப்படையச் செய்து அவர்களது  வாழ்விலும் மாற்றத்தை  ஏற்படுத்த முன்வர வேண்டும் என மேலும்  தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி அதிபர், திரு. ந.நவேந்திரகுமார், இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினர் திரு . இ.சரன் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் முன்னாள் செயலாளர், திரு. வல்லிபுரம் சுதர்மச்சந்திரன், ஆசியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.