மாணவர்கள் இளம் பராயத்திலேயே உளநல அறிவைப்பெற்று சமூகத்தில் முன்மாதிரியானவர்களாக திகழ வேண்டும். --சிரேஷ்ட. விரிவுரையாளர் பிரான்சிஸ்.







 

மாணவர்கள்  இளம் பராயத்திலேயே  உளநல அறிவைப்பெற்று சமூகத்தில் முன்மாதிரியானவர்களாக திகழ வேண்டும். அதற்கு பெற்றோர்களும் ஆசிரியர்களும் மாணவர்களுக்கான   உளவியல் ஆதரவு வழிகாட்டல் பயிற்சிகளைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.

இவ்வாறு கொழும்பு MIU பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் உளவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினரும், உளநல சமூக வலுவூட்டல் வளவாளருமான திரு. செமபாலை பிரான்சிஸ்  தெரிவித்தார்.

ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்துவதற்கும்,மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும், பெற்றோர் மத்தியில் புரிந்துணர்வை வளர்ப்பதற்கும் உறுதுணையாக கொழும்பு MIU பல்கலைக்கழகம் (UGC) உளவியல் கல்வி வழிகாட்டல் கருத்தரங்குகளை இலங்கையில் பல பகுதிகளிலும் மேற்கொண்டு வருகின்றது.

இதன் பிரகாரம் மட்டக்களப்பு  மேற்கு கல்வி வலையத்திற்கு உட்பட்ட பாடசாலைகளிலும்   வலையக்கல்வி பணிமனையின் அனுமதியுடன் மேற்படி வழிகாட்டல் பயிற்சி கருத்தரங்குகள் இடம்பெற்று வருகின்றன.

அந்த வகையில் மட்டக்களப்பு  மேற்கு, முதலைக்குடா மகா வித்தியாலயத்தின் அதிபர் திரு. A.கிருபாகரன் தலைமையில் பிரதி அதிபர் திரு. K.கிருபாகரன் அவர்களால்  கணிதப் பிரிவு மற்றும் கலைப்பிரிவு உயர்தர மாணவர்களுக்கு , குறித்த பாடசாலையின் உளவளத்துணை ஆசிரியை திருமதி. ஜெயராம் ரூபினி மற்றும் "பாடசாலையும் சமூகமும்"  எனும் தொனிப்பொருளில் செயற்படும் குழுச் செயற்பாட்டு ஆசிரியை MS.J.சித்ரா ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் உளநல வழிகாட்டல் பயிற்சி செயலமர்வு  23.09.2025 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

அதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும்  கூறுகையில் ,

மன அழுத்தம் பொதுவாக அனைவரிடமும் காணப்படுகின்றது. இதில் இருந்து விடுபடுவதற்கே அனைவரும் விரும்புகின்றனர். ஆனால் மன அழுத்தத்தின் நன்மை தீமை பற்றிய விபரம் தெரியாததாலும்  அதனை எவ்வாறு கையாளுவது  அதில் இருந்து மீள்வது போன்றன  பற்றியதை முழுமையாக அறிந்திராததால் அதிகரித்த மன அழுத்தத்துடன் வாழவேண்டிய நிலைக்கு அனைவரும் தள்ளப்படுகின்றனர்.

அதிலும் நாளைய தலைமுறையை தலைதூக்கி விடவேண்டிய இளம் பராயமுடைய மாணவச் செல்வங்கள் அதிகரித்த மன அழுத்தத்துடன் இன்று காணப்படுவதுடன் மட்டுமல்லாது மனநலப் பாதிப்பிற்கு உள்ளாகி மருந்து பாவிக்கும் நிலைக்கு உள்ளாகி வருகின்றமையும் தவறான முடிவுகளை எடுப்பதையும், நெறிபிறழ்வாக நடந்து வாழ்க்கையை சீரழிப்பதையும் காணும் நிலை அதிகரித்துள்ளது. இது கவலைக்குரிய விடயமாகும்.

 மாணவர்கள் உளநல அறிவைப் பெற்று தமக்கு ஏற்படும் மன அழுத்தத்தைப் பிரச்சினைகளை  எதிர்கொள்ளும் திறனை வளர்த்தெடுக்க வேண்டும். அதற்கு ஆசிரியர்களும் பெற்றோர்களும் வழிகாட்ட வேண்டும் என்றார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

மாணவர்களைப் பொறுத்த வரையில் ஆசிரியர்களும் பெற்றோர்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவர்கள். இரண்டு தரப்பினரும் ஒன்றுசேர்ந்து பயணிக்கும்போதே மாணவர்களை முழுமையான உள ஆளுமையில் வளர்த்தெடுப்பதுடன் தன்னம்பிக்கை கொண்டு செயலாற்றக் கூடிய திறனையும் பெற்றுக் கொள்பவர்களாக மாணவர்கள் காணப்படும் நிலை உருவாகும். 

மன அழுத்தத்தில் இருந்து மாணவர்கள் விடுபடுவதற்கு  நேர்மறை எண்ணத்தை வளர்த்தெடுக்க வேண்டும் அதற்கு பயிற்சிகளைப் பெறவேண்டும். இல்லையேல் ஒரு சிறிய பிரச்சினைகூட (Street /Anxiety)  தொடர் பிரச்சினையாக மாறி  நாளாந்த செயற்பாட்டில் அசாதாரன மாற்றத்தை கொண்டு வருவதுடன் கற்ற கல்விக்கேற்ப செயற்பட முடியாத அளவிற்கு எம்மை சீரழித்து விடும். அத்தொடு மனதை ஒரு நிலைப்படுத்த முடியாமை, தூக்கக் குழப்பம்,இதயத்துடிப்பு அதிகரித்தல்,  ஒய்வுடன் இருக்க முடியாமை,,அதிக மூச்சு வாங்குதல், தலைச் சுற்று, சமிபாட்டுக் கோளாறுகள் போன்ற பல கோளாறுகள் எம்மில் காணப்படும். என தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

மன அழுத்தத்தின் அளவை நாம் சரியாக கையாளும்போது எமது செய்கை ஆரம்பம் முதல் முடிவுவரை மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.  பிரச்சினைகள் வரும்போது மன அழுத்தத்தை கையாள்வது மிகவும் புத்திசாலித்தனமாகும் என கூறியதுடன் மன அழுத்தத்தில் இருந்து எவ்வாறு விடு படுவது என கேள்விகளை எழுப்பிய உயர்தர  மாணவர்களுக்கு மன அழுத்தத்தை கையாள்வதற்கான ஆரம்ப   அடிப்படை முறையினை சொல்லிக்கொடுத்ததுடன் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது சந்திக்கின்ற தோல்விகளை எதிர்கொள்ளும் திறனிலும் புத்திசாதுரியம் வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.