வாழைச்சேனை வை.அஹமத் வித்தியாலயத்தில் காசா குழந்தைகளுக்கான கல்வி பாதயாத்திரை.

   


 





 

 




























வாழைச்சேனை வை.அஹமத் வித்தியாலயத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து, “காசா குழந்தைகளின் கல்வி – முழு உலகினதும் பொறுப்பு” என்ற தொனிப்பொருளை மையமாகக் கொண்டு, 22.09.2025  செவ்வாய்க்கிழமை பாதயாத்திரை ஒன்றை முன்னெடுத்தனர்.

தரம் 1 முதல் 5 வரை  பதினைந்து வகுப்பறைகளில் கற்கும் சுமார் 492 மாணவர்கள் மற்றும் 22 ஆசிரியர்கள் பங்கேற்ற இந்நிகழ்வு, ரபீயுல் அவ்வல் மாதத்தை சிறப்பிக்கும் வகையில் நபி முகம்மது (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் கல்வி, கருணை, மனிதநேயப் பண்புகளை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டது.

பச்சை நிறக் கொடிகள் மற்றும் காசா குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திய மாணவர்கள், வாழைச்சேனை பிரதானச் சந்தை, அந்-நூர் தேசிய பாடசாலை மற்றும் கிராமத்தின் பல பிரதான வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்றனர்.

இப்பாதயாத்திரை,
 கல்வி என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் அடிப்படை உரிமை, காசா குழந்தைகளின் கல்வி பாதுகாப்பு முழு உலக மக்களின் பொறுப்பு
என்பதைக் குரலாக்கி சமூகத்திடம் கொண்டு சென்றது.

இந்நிகழ்வின் மூலம் சிறுவர்கள் உலகக் குழந்தைகளின் கல்வி உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை எழுப்பியமை குறிப்பிடத்தக்கது.


  ந.குகதர்சன்