முன்பள்ளி பாடசாலை சிறார்களின் உள நலம் குறித்து அக்கறை காட்டப்படல் வேண்டியது அவசியமானதாகும்- சிரேஷ்ட விரிவுரையாளர் பிரான்சிஸ்.

 
















முன்பள்ளி பாடசாலை மாணவர்களின் சமூக, உணர்ச்சி, மற்றும் அறிவாற்றல் வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்கும் உளநலத் தேவையை சரியாக புரிந்து கொண்டு குழந்தைகளை உள நலம் உள்ளவர்களாக  உருவாக்க வேண்டியது ஆசிரியர்களினதும் பெற்றோரினதும்  பொறுப்பாகும். 

இவ்வாறு கொழும்பு MIU பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் உளவியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும், இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் உறுப்பினரும்,  உளசமூக வலுவூட்டல் வளவாளருமான S. பிரான்சிஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு  மேற்கு கல்வி வலையத்திற்கு உட்பட்ட. விழாவெட்டுவான் சித்தி வினாயகர் முன்பள்ளி பாடசாலை மாணவர்களின் பெற்றோர்களுக்கு  ஒக்டோபர் 10, உலக மனநல தித்தை முன்னிட்டு  உளவலுவூட்டல் நிகழ்வு ஒன்று  மேற்படி பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டது

 முன்பள்ளி பாடசாலை  ஆசிரியர்களான திருமதி. சாந்தி இராஜேந்திரம், திருமதி. மதிவதனி சுதர்மச்சந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டில் விளாவெட்டுவான் வினாயகர் வித்தியாலயத்தின் பிரதி அதிபர்,  திருமதி. J. இலங்கேஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

 ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்களின் உணர்ச்சித் தேவைகளைப் புரிந்து கொண்டு நேர்மறையான கற்றல் சூழலை உருவாக்குவதன் மூலமே அவர்களின் உள நலனை மேம்படுத்தவும் முடியும். 

குழந்தைகள் தங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு சக நண்பர்களுடன் பழகும் திறனை வளர்த்தெடுப்பதற்கும் சுய மரியாதையை உருவாக்குவதற்கும் இந்த முன்பள்ளிப் பாடசாலை பருவம் மிகச் சிறந்த ஒரு பருவமாகும். அதற்கு குழந்தைகள் தொடர்ச்சியாக முன்பள்ளி பாடசாலை செல்ல வேண்டியது கட்டாயமானதாகும். அதற்கு பெற்றோர் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்தும் அவர் கருத்து   கூறுகையில், 

குந்தைகள் தமது  உணர்ச்சிகளைச் சமாளிக்கும் திறன், சுய மரியாதை  மற்றும் பிறருடன் தொடர்பு கொள்ளும் திறன் போன்றவற்றை வளர்த்தெடுப்பதும் அவர்களை ஆரோக்கியமான பழக்கவழக்கங்களுக்கு உட்படுத்தி உளவியல் ரீதியான ஆதரவை வழங்கி புதிய விடயங்களை சவால்களுடன் எதிர்கொள்ளும் திறனையும் உருவாக்க வேண்டும்.  

அத்துடன் விளையாட்டுக்களில் அவர்களை ஊக்குவிப்பதுடன் அவர்கள் பேசும் விடயத்தினையும்  நன்கு செவிமடுக்க வேண்டும்.  அப்போதுதான் சக நண்பர்களுடன் பழகி உணர்வுகளை வெளிக்காட்டுவதில் அவர்களின் உள ஆளுமை வெளிப்படும் என்றார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர், 

குழந்தைகள் எவ்வாறு தங்களது உணர்வுகளை புரிந்து கொள்கின்றார்கள் அதனை எவ்வாறு கையாள்கின்றனர் என்பதை அவதானித்து அதை சரியான முறையில் சொல்லிக்கொடுக்க வேண்டும். இல்லையேல் குழந்தைகளால் உளநலனுடன் கல்வி கற்க முடியாத நிலை ஏற்படும்.

இன்று சிறுவர் உளநலப் பிரச்சினைகள் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதனால் எமது குழந்தைகள் ஒருவிதமான கவலையுணர்வுடனே வீடுகளிலும் பாடசாலையிலும் காணப்படுகின்றனர். 

எனவே இவ்வாறான பிரச்சினைகளை சரியாக இனம்கண்டு மாணவர்களை உளநலத்துடன் உருவாக்குவதற்கு     ஆசிரியர்களுமம்  பெற்றோர்களும்  உள நலம்                                                                                                                                 பற்றிய விழிப்புணர்வை   பெற்றுக் கொள்ள வேண்டியது  கட்டாயம் என அவர் மேலும் தெரிவித்தார்.