ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலகிச் சென்று ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்ட உறுப்பினர்கள் உட்பட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மீது விதிக்கப்பட்ட இடைநிறுத்த உத்தரவை நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது எனக் கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார் என்று தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கட்சியின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை ஒற்றுமையை நோக்கி எடுக்கப்பட்ட முதல் படி என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் கூறுகின்றன.
இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாட்டுக்கு அனைத்து உறுப்பினர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர்.